தங்காலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் யாருடையது? - உயிரிழந்தவர்கள் குறித்து வெளியான தகவல்



தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்று முன்தினம் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட அதே நேரத்தில் அந்த வீட்டில் இருந்த மற்றொருவர் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.  

இந்நிலையில் சீனிமோதர வீட்டிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் கடந்த 21 ஆம் திகதி கடல் மார்க்கமாக படகு மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


குறித்த போதைப்பொருள் தொகையானது குடவெல்ல, மாவெல்ல கடற்கரையில் தரையிறக்கப்பட்டுள்ளது.


கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு போதைப்பொருள் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் லொரிகளில் ஏற்றப்பட்டு, சீனிமோதர மற்றும் கொடெல்லவெல பகுதிகளுக்கு இரு சந்தர்ப்பங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மேலும் மாவெல்ல கடற்கரையிலிருந்து சீனிமோதர வீட்டிற்கு போதைப்பொருட்களை கொண்டு சென்ற குழு அந்த வீட்டிலும் மது அருந்தியுள்ளனர்.


அந்த வீட்டில் மது அருந்திய மூவரில், நோய்வாய்ப்பட்ட 49 வயது நபர் அவரது இரண்டு மகன்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தங்கள் தந்தையின் சிறிய லொரியை எடுத்துச் செல்ல சீனிமோதர வீட்டிற்கு வந்துள்ளனர்.


வீட்டில் இருந்த ஒரு குழு தங்களை மது அருந்த கட்டாயப்படுத்த முயன்றதாககவும் அவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நபரின் இரு மகன்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

இந்த பின்னணியில் தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் இருந்து மூன்று பேர் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த மரணங்கள் குறித்து சட்ட வைத்திய பரிசோதனையை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணயக்கார மேற்கொண்டார்.

இதன்போது குறித்த மூவரின் மரணங்கள் பியர் மற்றும் ஹெரோயின் அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.


இதேவேளை, போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த லொரிகளின் பதிவு செய்யப்பட்ட மூன்று உரிமையாளர்கள் கல்கிஸ்ஸை, எல்பிட்டிய மற்றும் மீட்டியாகொட பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பாதாள உலகக் குழு உறுப்பினர் உனகுருவே சாந்தவின் முக்கிய ஆதரவாளர் கல்கிஸ்ஸை பகுதியில் கைது செய்யப்பட்டார், அவர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர். கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரிடம் இருந்து 11 கிராம் 140 மில்லிகிராம் ஹெராயின் போதைப்பொருளும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளளது.

சந்தேகநபர் நான்கு முறை போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

லொறிகளின் உரிமையாளர்கள் மூவரும் கல்கிஸ்ஸை மற்றும் தங்காலை நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம்மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.