பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? - ரிஷி சுனக்- லிஸ் ட்ரஸ் இடையே கடும் போட்டி!

பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட ஐந்தாவது சுற்று வாக்குப் பதிவில், முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்தார்.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற வாக்குப் பதிவில், ரிஷி சுனக்கு 137 பேர் ஆதரவு அளித்தனர். வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்க்கு 113 பேர் ஆதரவு அளித்தனர்.வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி மார்டன்ட் 105 வாக்குகள் என்ற குறைந்த வாக்குகளுடன் போட்டியிலிருந்து வெளியேறினார்.

இதன்மூலம் இறுதிக்கட்ட பிரதமர் வேட்பாளர்களாக ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர். ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருவரும் எதிர்வரும் திங்கட்கிழமை நடக்கவுள்ள தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கவுள்ளனர்.புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான இறுதி சுற்றில் பழமைவாத கட்சியில் (கன்சர்வேடிவ்) மொத்தமுள்ள இரண்டு இலட்சம் உறுப்பினர்களும் தபால் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.

இந்த வாக்குகள் எண்ணப்பட்டு அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். செப்டம்பர் 5ஆம் திகதி வெற்றியாளர் அறிவிக்கப்பட உள்ளார். வெற்றியாளர் பிரித்தானியாவின் புதிய பிரதமராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.