இலங்கையில் பிரபல அரசியல் தலைவர் ஒருவர் வெகு விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் அதிகாரியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.
பிரபல யூடியுப் செய்தி சேவை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலக குழுக்களுடன் முன்னாள் ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய பிரபல கட்சியை சேர்ந்த பலர் நேரடி தொடர்பு வைத்துள்ளனர். பாதாள உலக குழு உறுப்பினர்களால் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.
இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களால் புலனாய்வு பிரிவிற்கு பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் முக்கிய பல தகவல்களை தற்போது வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான தகவல்களை வெளியிட்டால் கைது செய்யப்படவுள்ள பிரபல அரசியல் தலைமை தப்பித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
பாதுகாப்பு படை பிரிவு அல்லது பொலிஸ் அதிகாரியின் உடையில் வரும் மர்ம நபர்களால் ஜனாதிபதி கொலை செய்யப்படலாம் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதாள குழு உறுப்பினர்களுடன் அரசியல்வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளமை அண்மையில் கைது செய்யப்பட்ட மனம்பேரி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேஹேல்பத்தர பத்மே மற்றும் நகர பிதாவான எரங்க சேனாரத்ன டுபாயில் ஒன்றாக நீச்சல் தடாகத்தில் குளிக்கும் புகைப்படங்கள் என்னிடம் உள்ளது. தங்காலையில் மிகப்பெரிய அளவில் ஐஸ் போதைபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஐ.எஸ் போதைப்பொருள் மீட்பின் போது 3 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருடன் பாதாள உலக குழுவிற்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டது.
எனினும் தற்போது அவ்வாறு இல்லை என்பதனையும் காண முடிகின்றது. தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பாதாள உலக குழுவிற்கு எதிராக உள்ளது.
இதனால் எடுக்கப்படும் நடவடிக்கையே பாதாள குழுக்களை அழிக்க கூடியதாகும். இவ்வாறான சூழலில் நாட்டின் பிரதான தரப்பு தலைவர் ஒருவர் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படவுள்ளார்.
இதன் காரணமாக முன்னாள் அரசியல்வாதிகள் ஒன்றாக இணைந்துள்ளனர். அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் மாநாட்டில் தயாசிறி ஜயசேகர போன்றவர்கள் கூறிய விடயங்களை நன்கு கவனித்தால் விடயம் புரியும் என அஜித் தர்மபால மேலும் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் போதைப்பொருள் கடத்தலுடன் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால வெளிப்படையாக தெரிவித்திருந்த பின்னணியில் தற்போது பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் அதிகாரியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் அஜித் தர்மபால இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.