எங்கே பிரபாகரன்.. அவர் இருந்திருந்தால்..!

யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன, ஆயுதப் போராட்டம் தான் ஈழ மக்களின் அரசியல் தீர்வுக்குத் தடையாக இருந்தது எனப் பேசியவர்கள், அது கைவிடப்பட்டு பதின்நான்கு ஆண்டுகள் ஆன பின்பும் அதே நிலை நீடிப்பது குறித்து வாய் திறக்காமல் இருக்கிறார்கள். கேட்டால் இந்தியா பார்த்துக்கொள்ளும் என சப்பை கட்டு கட்டுகின்றார்கள்.

யுத்த காலத்தில் இருந்ததைவிட, கடும் அடக்குமுறைகளுக்கு ஆளாகிவருகிறார்கள் ஈழ மக்கள். நிலங்கள் பறிக்கப்படுகின்றன. கோயிலுக்குள் புத்த விகாரைகள் முளைக்கின்றன. பலர் காணாமல் ஆக்கப்படுகிறார்கள். பதவிகளில் இருக்கும் அரசியல் வாதிகள் மீதே காவல்துறையினர் கை வைக்கின்றார்கள்.

இந்த சூழலில் தான்,  'எங்கே பிரபாகரன்..., பிரபாகரன் ஆட்சிக் காலத்தில்...., அவர் இருந்திருந்தால்'' என்னும் சாமான்ய மக்களின் குரல்கள் ஒலிக்கத்தொடங்கியிருக்கின்றன.

இப்படியிருக்க, நாம் பலமோடு இருந்த காலத்திலேயே நமது உரிமைகளைக் கொடுக்காதவர்கள், இப்போதா கொடுக்கப்போகிறார்கள் என மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது..

அது மட்டுமல்ல, ''தமிழீழ விடுதலை புலிகள் வலிமையாக இருந்த காலத்தில் எந்த நாட்டின் அச்சுறுத்தலும் இல்லை.

குறிப்பாக, கொடிகட்டிப் பறக்கும் சீனாவின் ஆதிக்கம், ஆழ வேரூன்ற சந்தர்ப்பம் தேடி திரியும் அமெரிக்கா என சகல பக்கங்களாலும் இலங்கையை கூறு போடும் எதுவித செயற்பாடுகளும் பிரபாகரன் காலத்தில் இல்லை.

ஆனால் எப்போது போர் வெற்றி வீரர்களாக தம்மை தாமே வர்ணித்து கொண்டவர்கள் ஆட்சிப்பீடம் ஏறினார்களோ அப்போதிலிருந்தே இலங்கையை துண்டுபோட வல்லரசுகள் தயாராகிவிட்டன

இது இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ஆக, மீட்பராக...காப்பாராக இருந்த ஒருவரை ஈழ மண் இழந்ததன் விளைவே இன்று அரங்கேறும் அத்தனைக்கும் பிரதான காரணமாக இருக்கிறது.

ஆம். "இலங்கை தீவினில்

வாழ்ந்த ஒரே ஒரு புத்தனையும்

நந்திக்கடலில் தொலைத்துவிட்டு

அமைதியையும் சமாதானத்தையும்

மரண ஓலங்களுக்கு இடையே தேடியலைகிறார்கள்.

துன்பச்சிலுவை சுமந்திட

அங்கே மீட்பர் என்று இப்போது யாரும் இல்லை.'' - எனும் கவியொருவனின் வரிகள்தான் இப்போது நினைவுக்குவருகின்றன.