இலங்கை தமிழர்கள் 248 பேரும் எங்கே..!



2019 இல் நியுசிலாந்துக்கு ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்ட இலங்கையர் தொடர்பாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இவர்கள் காணாமல் போயிருக்கலாமென, நியுசிலாந்தின் ஊடகமொன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

நியுசிலாந்தைச் சென்றடைவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கத்தின் ஆவணங்களில் இலங்கையைச் சேர்ந்த 248 பேருடன் காணப்பட்ட மீன்பிடிப்படகை மீண்டும் காணவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2019ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி ஆட்கள் பயணிக்கும் படகாக மாற்றப்பட்ட 27 மீற்றர் ஆழ்கடல் மீன்பிடிப்படகு இந்தியாவிலிருந்து 248 தமிழர்களுடன் புறப்பட்டது.

அந்தப் படகு, அவுஸ்திரேலியா அல்லது நியுசிலாந்தை சென்றடைய முயற்சி செய்திருக்கலமென, நியுசிலாந்து அரச ஆவணங்கள் தெரிவித்துள்ளன.​ அதன் பின்னர், அந்தப் படகிலிருந்தவர்கள் தொடர்பாக எந்தத் தகவலும் இல்லையென, நியுசிலாந்தின் ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான விசாரணைகளின் போது, கைது செய்யப்பட்ட பிரபு தண்டபாணி என்ற நபர், குறிப்பிட்ட படகு நியுசிலாந்துக்கே சென்று கொண்டிருந்ததாக, இந்தியப் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.

பெருமளவு எண்ணிக்கையிலானவர்கள் நியுசிலாந்துக்குள் நுழைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான அந்த ஆவணங்களில், தமிழர்கள் கேரளாவிலிருந்து நியுசிலாந்து அல்லது அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி தொடர்பாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அகதிகள் மிக மோசமான நிலையில் வாழ்ந்ததாக இந்தக் கட்டுரையை எழுதிய கே.பி. சைகிரான் என்பவருக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தங்கள் பயணத்தை பாதுகாப்புத் தரப்பினர் கண்டுபிடிப்பதைத் தவிர்ப்பதற்காக 25 நாட்கள் நீடித்த படகுப் பயணத்தின் போது, அவர்கள் ஜி.பி.எஸ். சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர்.

இந்தப் படகு நீரில் மூழ்கியிருக்க வேண்டும் அல்லது இலங்கை அதிகாரிகள் இவர்களை கைது செய்திருக்க வேண்டும். இதனால் அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாமென, ஒரு காவல்துறை உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், அவர்கள் உயிரிழந்திருக்கலாமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.