ஒசாமா பின்லேடன் இறந்த பின் அவரது மனைவிகள் எங்கே? - பாகிஸ்தான் என்ன செய்தது? - அதிர்ச்சி விபரங்கள் வெளியாகின!


ஒசாமா பின்லேடன் இறந்த பின் அவரது மனைவிகள் நிலைமை என்ன ஆனது என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

உலகில் உள்ள முக்கிய பயங்கரவாத அமைப்பான  அல்கொய்தாவின் முந்தைய தலைவர் ஒசாமா பின்லேடனை 2001 ஆம் ஆண்டு நடத்திய இரட்டை கோபுர தாக்குதலுக்காக அமெரிக்கா 2011 இல் பாகிஸ்தானில் உள்ளே சென்று தாக்கி கொன்றது.
 
மே 2, 2011 காலை, பாகிஸ்தானின் அபோதாபாத்தில் 40 நிமிட தாக்குதலில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஒசாமா பின்லேடனை சுட்டுக்கொன்றனர்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலகையே திகைக்க வைத்தது மாத்திரமல்லாமல், பாகிஸ்தானின் நம்பகத்தன்மையை சர்வதேச ஆய்வுக்கு உட்படுத்தியது.
 பின்லேடன் மரணத்திற்குப் பின் அவரது குடும்பம் என்ன ஆனது என்பது மர்மமாக இருந்துவந்தது.

இந்த மர்மத்திற்கு தற்போது விடைகிடைத்திருக்கிறது. பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹத்துல்லா பாபர் என்பவர் "தி ஜர்தாரி பிரசிடென்சி: நவ் இட் மஸ்ட் பி டோல்ட்" என்கிற புத்தகத்தை எழுதியுள்ளார்.
 
அதில் பின்லேடன் கொல்லப்பட்ட பின் நடந்த சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அதே புத்தகத்தில் பின்லேடன் கொல்லப்பட்ட பின் அவரது மனைவிகளுக்கு என்ன ஆனது என்பதையும் அவர் விவரித்துள்ளார்.

அதன்படி, பின்லேடன் கொல்லப்பட்ட உடனேயே அவரது மனைவிகளை பாகிஸ்தான் அதிகாரிகள் காவலில் எடுத்தது என்று அவர் கூறியிருக்கிறார்.
 
அப்படி அவர்களை காவலில் எடுத்த சில நாட்களில் அமெரிக்காவின் சிஐஏ குழு பாகிஸ்தானின் அபோதாபாத் வந்து பின்லேடனின் மனைவிகள் குறித்து விசாரித்தது.
 
சிஐஏவின் இந்த வருகை பாகிஸ்தானின் இறையாண்மை குறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பியதையும் ஃபர்ஹத்துல்லா பாபர் தனது புத்தகத்தில் விவரித்துள்ளார்.

கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு நஜ்வா கானெம், கதீஜா ஷெரீஃப், கைரியா சபர், சிஹாம் சபர் மற்றும் அமல் அகமது அல்-சதா என்று மொத்தம் ஐந்து மனைவிகள் இருந்தனர்.
 
இருப்பினும் அவர்களில் இரண்டு மனைவிகளை பின்லேடன் விவாகரத்து செய்தார். 2011-ல் பின்லேடன் இறக்கும் போது, அவரது மூன்று மனைவிகளும் அவரது பல குழந்தைகளும் அபோதாபாத் வளாகத்தில் அவருடன் வசித்து வந்தனர் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, "பின்லேடனின் அபோதாபாத் மறைவிடம் குறித்த தகவல்களை நீண்ட காலத்திற்கு முன்பே சிஐஏ சேகரித்து வைத்திருந்தது.
 
ஏன், உலகின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதியான பின்லேடன் தங்கியிருந்த வளாகத்தை கட்டிய ஒப்பந்ததாரரின் அடையாளத்தைக் கூட அமெரிக்காவின் சிஐஏ நிறுவனம் அறிந்திருந்தது" என்று அந்த புத்தகத்தில் ஃபர்ஹத்துல்லா பாபர் கூறியிருக்கிறார்.