வீடின்றி உணவின்றி மக்கள் துன்பப்பட்டபோது மஹிந்த ராஜபக்ஷ செய்த செயல்! -அநுர தரப்பு பகிரங்கம்


வாழ்வதற்கு வீடு இல்லாமல், உண்பதற்கு உணவு இல்லாமல் நாட்டு மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வசித்த வீட்டினை திருத்தியமைப்பதற்காக ட5000 இலட்சம் ரூபாய் நிதியினை செலவு செய்துள்ளமை பாரிய குற்றமான விடயம் என பிரதி அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.


கிராமிய வீதிகளை திருத்தியமைக்கும் அரசாங்கத்தின் பாரிய வேலைத்திட்டத்தின் கீழ் அநுராதபுரம் தலாவ பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட எப்பாவல, கல்வடுவாகம வீதியினை 75 மில்லியன் ரூபாய் செலவில் திருத்தியமைக்கும் பணிகளை அண்மையில் ஆரம்பித்துவைத்த பின்னர், இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியபோதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள குறைந்த வருமானங்கள் உடைய குடும்பங்களுக்கு புதிதாக 150க்கும் அதிகமான வீடுகள் அமைப்பதற்காக 1400 இலட்சம் ரூபாய் நிதி செலவிடப்பட்டதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். 


ஆகையால் ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் இனிமேல் வழங்கப்படமாட்டாது. அந்த அனைத்து நிதியும் மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்படும்.


இந்த நாட்டின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் நிதியினை சூறையாடியவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உரிய முறையில் நிறைவேற்றும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.