உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம் என்ன! சர்ச்சையை கிளப்பிய கருத்து


முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சார்பில் சட்டத்தரணி ஒருவர் நேற்று (19.04.2023) பயங்கரவாத விசாரணை பிரிவில் (TID) முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம் தொடர்பான முன்னாள் சட்டமா அதிபரின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரிக்க அவரை பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு நேற்று முன்தினம்(18.04.2023) அறிவிக்கப்பட்டது.

இதன்படி, தப்புல டி லிவேரா சார்பில் சட்டத்தரணி திமித்ர அபேசேகர நேற்று காலை பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.

குறித்த விடயம் தொடர்பான ஏழு பக்க சட்ட ஆட்சேபனை பயங்கரவாத விசாரணை பிரிவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி திமித்ர அபேசேகர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில், பாரிய சதித்திட்டம் இடம்பெற்றுள்ளதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சர்ச்சைக்குரிய கருத்தை 2021 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், விசாரணைக்காக நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.

அதன் பிரதி ஒன்றை அப்போதைய சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம் கையளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியில், தப்புல டி லிவேரா, 2021 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதன் பின்னர் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில், பாரிய சதித்திட்டம் இடம்பெற்றிருந்ததாகவும், அது தொடர்பில் அனைவரும் சாட்சிகள் ஊடாக கண்டறிய வேண்டும் என்றும் விசேட கலந்துரையாடல் ஒன்றில் தப்புல டி லிவேரா கருத்து வெளியிட்டிருந்தார்.

குறித்து கருத்து தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.