பழிவாங்கும் அச்சுறுத்தலைக் கைவிட வேண்டும் - ஈரானுக்கு மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை

 


இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்னும் கொக்கரிப்பை அடக்குமாறு ஈரானிடம் அமெரிக்காவும் ஐரோப்பிய நட்பு நாடுகளும் தெரிவித்து உள்ளன.

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் மத்திய கிழக்கில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய போருக்கு அது இட்டுச் செல்லக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விமானம் தாங்கி போர்க்கப்பலையும் நீர்மூழ்கியில் இருந்து விண்ணுக்குச் செலுத்தப்படும் ஏவுகணைகளையும் ஒன்றுதிரட்டி வருவதால் மத்திய கிழக்குபிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

யுஎஸ்எஸ் ஜார்ஜியா எனும் ஏவுகணை பாய்ச்சக்கூடிய நீர்மூழ்கிக் கப்பலை மத்திய கிழக்குக்குக் கொண்டுசெல்ல அமெரிக்கத் பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் உத்தரவிட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலின் தலைமையிலான விமானந்தாங்கிப் போர்க் கப்பல்கள் எஃப்-35 ரகப் போர் விமானங்களை அனுப்பவும் அவர் ஆணையிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸின் அரசியல் தலைவரை தெஹ்ரானிலும் ஹிஸ்புல்லா குழுவின் மூத்த தளபதி ஒருவரை பெய்ரூட்டிலும் இஸ்ரேலியப் படைகள் படுகொலை செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதற்குப் பழிதீர்க்கும் வகையில் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த ஈரானும் லெபனான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா குழுவும் உறுதிபூண்டுள்ளன.

இந்நிலையில், ஈரானின் தாக்குதலைத் தடுத்தும் நிறுத்தும் அனைத்துலக முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

அதன் ஒரு பகுதியாக, தெஹ்ரானை எச்சரிக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகியவற்றின் தலைவர்களும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேலுக்கு எதிராக ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சுறுத்தலைக் கைவிடுமாறு ஈரானைக் கேட்டுக்கொள்கிறோம்.

தாக்குதல் நடத்தப்படுமானால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகள் பற்றி நாங்கள் கலந்து ஆலோசித்தோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.