இறையாண்மைக்கு பாதகம் ஏற்பட்டால் பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் - புடின் எச்சரிக்கை



ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையிலான போர் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இந்த மோதலில் இரு தரப்பினருக்கும் உயிர்ச்சேதங்கள் தொடர்கின்றன.

அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் உக்ரேனுக்கு ஆதரவு தெரிவித்து வருவதோடு, அண்மையில் தமது ஆயுதங்களை போர் நடவடிக்கைகளுக்கு  உக்ரேன் பயன்படுத்திக் கொள்ளலாம் என அமெரிக்கா அறிவித்திருந்தது.

அத்தோடு அண்மையில் ரஷ்யா மீது  உக்ரேன் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலுக்கு ஜேர்மனி ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,  ஜேர்மனியின் ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யா மீது  உக்ரேன்  தாக்குதல் நடத்தியிருப்பது ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி மேலைத்தேய நாடுகளை நீண்ட தொலைவுக்குச் சென்று தாக்கக்கூடிய ஆயுதங்களை வேறு சில நாடுகளுக்கு ரஷ்யா வழங்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளதாக சில சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

அதன்படி உக்ரேன் ஜேர்மனியின் ஆயுதங்களைப் பயன்படுத்திய குற்றச்சாட்டை முன்வைத்த புடின், ஜேர்மனிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு தங்களது நாட்டின் இறையாண்மைக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் ஏதாவது நடந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நாங்கள் தயார் எனவும் புடின் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பிரான்ஸ் ராணுவத்தின் எந்த அதிகாரியும் உக்ரேனில் இருந்தால், நிச்சயம் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரேனுக்கு பிரான்ஸ் இராணுவ பயிற்சியாளர்களை அனுப்பலாம் என்ற செய்திகளுக்கு மத்தியில் ரஷ்யாவின் இந்த அறிக்கை வந்துள்ளது.

இதுகுறித்து உடைக்க சந்திப்பொன்றில் பேசியுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், 


பிரெஞ்சு ஆயுதப் படைகளின் உறுப்பினர்களாக இருந்தாலும் சரி அல்லது கூலிப்படையினராக இருந்தாலும் சரி, அவர்கள் முற்றிலும் எங்கள் இலக்காக மாறுவார்கள் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.