நாட்டு மக்களை ஏமாற்றுவது போன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியையே இலங்கை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது என்றும், இவ்வாறு ஏமாற்றுவது இருநாடுகளுக்கு இடையே மோதல் நிலைமையை உருவாக்கும் என்றும் பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திருந்த போது, தம்புளையில் திறந்து வைக்கப்பட்ட வெப்பநிலை கட்டுப்பாட்டு விவசாயக் களஞ்சியம் இன்னும் அரசாங்கத்தால் இயக்கப்படாமல் இருப்பது தொடர்பில் அங்கு சென்று நேரடியாக ஆராய்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
இந்த அரசாங்கம் எங்களுக்கு கூறிய பொய்களால் ஏமாற்றியது. நாங்களும் ஏமாற்றமடைந்தோம். அது பரவாயில்லை. ஆனால்சிறுவர்களை 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையை இரத்துச் செய்வதாக கூறி ஏமாற்றியது.
யானைகளுக்கு வைத்தியசாலையென யானைகளை ஏமாற்றியது. பிரச்சினையின்றி வாழ்வதற்கு தீவொன்றை வழங்குவதாக குரங்குகளை ஏமாற்றியது.
இதுகூட பிரச்சினையில்லை என்றாலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையே ஏமாற்றியுள்ளனர்.
அதாவது இந்த வெப்பநிலை கட்டுப்பாட்டு விவசாயக் களஞ்சியம் திறந்து வைக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்துள்ள போதும் இன்னும் இது செயற்படவில்லை. சர்வதேச நாடுகளை இப்படி ஏமாற்றுவது நாடுகளுக்கு எதிரான யுத்தங்களையே உருவாக்கும்.
இவ்வாறு செய்து எங்கள் மீது குண்டுகள் விழும் நிலைக்கு தள்ளிவிட வேண்டாம் என்று ஜனாதிபதியை கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்தார்.