ரபா நகர் மீது தாக்குதல் நடத்தினால் பேச்சுவார்த்தையில் பாதகமான விலைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தை கட்டார் தலைநகர் டோஹாவில் மூன்றாவது நாளாக நேற்றும் இடம்பெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிப்பதோடு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற கட்டார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், இந்தப் பேச்சுவார்த்தையில் முடிவொன்று எட்டப்பட்டதாக கூறுவது முன்கூட்டியதாக இருக்கும் என்றும் பேச்சுவார்த்தை தொடர்பில் அவதானத்துடனும் நம்பிக்கையுடனும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இஸ்ரேல் திட்டமிட்டு வரும் காசாவின் ரபா நகர் மீதான தாக்குதல் ஒன்று முன்னெடுக்கப்பட்டால் பேச்சுவார்த்தையில் அது பாதகமான விலைவையே ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா பகுதி இஸ்ரேலிய தரைப்படை நுழையாத காசாவின் ஒரே பிரதான நகராக இருந்து வருகிறது.
 
எனினும் ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் திட்டத்தை பூர்த்தி செய்ய ரபா மீது படை நடவடிக்கையை முன்னெடுப்பது அவசியமாக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி வருகிறார்.

கட்டாரில் இஸ்ரேலிய பிரதிநிதிகளுக்கு தலைமை வகிக்கும் இஸ்ரேல் உளவுப் பிரிவு தலைவர் டேவிட் பார்னீ, இஸ்ரேல் போர் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் திரும்பியுள்ளார்.
 
இதில் டொஹாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பதில் முன்மொழிவுகள் தொடர்பில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் உடன்பாடு ஒன்றை எட்டுவதில் அவநம்பிக்கை இருப்பதாக பெயர் குறிப்பிடாத இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் சென்னல் 12 தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார். காசாவில் உள்ள ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், உண்மையில் உடன்பாடு ஒன்றை நாடுகிறாரா அல்லது காலத்துடன் விளையாடுகிறாரா என்பது தொடர்பில் சந்தேகத்தை அந்த அதிகாரி வெளியிட்டுள்ளார்.