அதிகரித்துள்ள போர் பதற்றம் - போர் விமானங்களை தரையிறக்கி ஒத்திகை பார்க்கும் இந்தியா


போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய  விமானப் படை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுதளத்தில் முதல் முறையாக போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமானப் படை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் மற்றும் அவசர காலங்களில் பயன்படுத்தக் கூடிய இந்த ஓடுதளத்தில் பகலில் மட்டுமல்லாது இரவிலும் போர் விமானங்கள் தரையிறங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், போர் விமானங்களின் ஒத்திகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

விமானப் படையின் தயார் நிலையை உறுதி செய்வதில் முக்கிய மைல்கல்லாகவும் இது அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


உத்தர பிரதேசத்தில் ஏற்கெனவே லக்னௌ-ஆக்ரா, பூர்வாஞ்சல், புந்தேல்கண்ட் ஆகிய மூன்று விரைவுச் சாலைகளில் போர் விமானங்களைத் தரையிறக்கும் வகையில் அவசரகால ஓடுதளங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று ஓடுதளங்களிலும் பகல் நேரத்தில் மாத்திரமே போர் விமானங்களைத் தரையிறக்க முடியும்.

இருப்பினும், கங்கா விரைவுச் சாலையில் இரவிலும் போர் விமானங்களைத் தரையிறக்கும் வசதியுடன் அவசரகால ஓடுபாதை கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் போர் விமானங்கள் பகலில் மாத்திரமன்றி இரவிலும் தரையிறங்கக் கூடிய நாட்டின் முதல் விரைவுச் சாலை என்ற சிறப்பை கங்கா விரைவுச் சாலை பெற்றுள்ளது.

இச்சாலையில் 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுபாதை கட்டமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், போர் விமானங்களைத் தரையிறக்குதல், தாழ்வாக பறத்தல் மற்றும் புறப்படுதலை பரிசோதிக்கும் இரண்டு நாள் ஒத்திகையை இந்திய விமானப் படை ஆரம்பித்துள்ளது.