அமெரிக்க அதிபராவதற்கு எனது மதம் ஒரு தடையாக இருக்காது: சர்சைகளுக்கு பதிலடி கொடுத்த விவேக் ராமசாமி


அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி தொடர்பில் எழுந்த சர்ச்சைகளுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

ஒரு இந்து எப்படி அமெரிக்க அதிபராக முடியும் என்று அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

"நான் ஒரு இந்து. நான் என் அடையாளத்தை போலியாக காட்ட மாட்டேன். இந்து மதமும், கிறிஸ்தவமும் பொதுவான ஒரே மதிப்பைப் பகிர்ந்து கொள்கின்றன.

எனது மத நம்பிக்கையின் அடிப்படையில், ஒவ்வொரு நபரும் ஒரு காரணத்திற்காக இங்கே இருக்கிறார்கள். அந்த காரணத்தை நிறைவேற்றுவது நமது தார்மீகக் கடமை என்றும் நான் நம்புகிறேன்.

ஏனென்றால் கடவுள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார். கடவுள் நம் மூலம் பல்வேறு வழிகளில் செயல்பட்டாலும், நாம் அனைவரும் சமம். இந்த நாட்டில் கிறிஸ்தவத்தை பரப்புவதற்கு நான் சிறந்த அதிபராக இருப்பேனா? என்றால் இல்லை.

அதற்கு நான் சரியான தேர்வாக இருக்க மாட்டேன். ஆனால் எந்த மதிப்புகளின் மீது அமெரிக்க நாடு நிறுவப்பட்டதோ, அவற்றின் பக்கம் நான் நிற்பேன்.

கடவுள் எங்களை ஒரு நோக்கத்திற்காக இங்கு சேர்த்தார் என்று நான் நம்புகிறேன். எனது நம்பிக்கைதான் என்னை அதிபர் பதவிக்கு போட்டியிட இந்த பயணத்தில் வழிநடத்துகிறது என்றார்.

மேலும் நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தனது மதம் ஒரு தடையாக இருக்காது என்று அமெரிக்கர்களுக்கு தொடர்ந்து உறுதியளித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமிக்கு ஆதரவு அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.