சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
நுகேகொடையில் எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் பேரணி தொடர்பான கலந்துரையாடலுக்காக அவர் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமலின் விஜயம்
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒழுங்கு செய்யப்படும் இந்தப் பேரணிக்கான திட்டங்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
கலந்துரையாடலைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவும், நிறைவேற்றப்படாத பாதீட்டு திட்டங்களை நிவர்த்தி செய்யவும் வலியுறுத்த வேண்டும் என கோரவே தாம் வந்ததாக கூறினார்.
அரசாங்கம் ஏமாற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், பொதுமக்களைத் தோல்வியடையச் செய்யும் அதே வேளையில் சில குழுக்களை மகிழ்விக்க முயற்சிப்பதாகக் கூறினார். அரசாங்கம் பொய் சொல்கிறது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
பொய்யான கூற்றுக்களின் கீழ் என்னைக் கைது செய்யக்கூட முயன்ற போதிலும் அது முடியாது போனது என்று அவர் மேலும் கூறினார்.
