வெடுக்குநாறி மலையா..! பர்வத விகாரையா..! வெடித்த புதிய சர்ச்சை


வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த பகுதியை பௌத்த தொல்பொருள் இடமாக மாற்றும் முயற்சிகள் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதி கூகுல் வரைபடத்தின் மூலம் பௌத்த விகாரையாக பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பான விவரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றமை ஆய்வில் பகிரங்கமாகியுள்ளது.

வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் கோவில் அமையப்பெற்றுள்ளது.

எனினும் குறித்த பிரதேசம் பௌத்த சிங்களவர்களுக்கு சொந்தமான பகுதி என பிரஸ்தாபிக்கப்பட்டு, பௌத்த ஆக்கிரமிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை பகிரங்கமானது.

இதன் ஒரு பகுதியாக ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதி, ஒரு பௌத்த விகாரை என இணைத்தளங்களில் பதிவுகள் இடப்பட்டு வருகின்றமை பகிரங்கமாகியுள்ளது.

வட்டவடிவான பாறை விகாரை எனப் பொருள்படும் வகையில் “வட்டமான பர்வத விஹாரய” என கூகுல் வரைபடத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விகாரை குறித்த விவரணங்களும், கூகுல் வரைபடத்தில் சிலர் பதிவு செய்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக இந்த விகாரை அநுராதபுர காலத்து விகாரையுடன் தொடர்புடையது என்ற வகையில் விவரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி குறித்த பிரதேசம் பௌத்த சிங்கள மக்களின் பூர்வீக நிலம் என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் இரகசிய முறையில் செய்யப்பட்டு வருகின்றமை புலனாகின்றது.

இந்த நிலையில் தான் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விக்கிரகங்கள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டுள்ளமை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் அகற்றப்பட்டு புதருக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளமை தமிழ் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி காவல்துறையினர் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்ததுடன் தொல்பொருட்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் வவுனியா நீதிமன்றில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் தொல்பொருட்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் நிர்வாகத்தினர் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர்.

எனினும் கடந்த வருடம் குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆலயத்தின் பூசகர் மற்றும் நிர்வாகத்தினர்கள் வழக்கிலிருந்து தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டதுடன், குறித்த சம்பத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை ஆதராங்களுடன் கண்டறிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு காவல்துறையினருக்கு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை ஆலயத்திற்கு சென்ற கிராம மக்கள் மற்றும் பூசகர் ஆலய விக்கிரகங்கள் திருடப்பட்டு உடைத்தெறியப்பட்டமையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறிப்பாக ஆலயத்தின் பிரதான விக்கிரகமான ஆதிலிங்கம் அகழ்ந்து எடுக்கப்பட்டு அருகில் இருந்த புதருக்குள் வீசப்பட்டுள்ளது.

அத்துடன் பிள்ளையார், அம்மன், வைரவர் விக்கிரங்களும் பெயர்த்தெடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வவுனியா வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் சைவ அமைப்பினர் இன்று கவனயீர்ப்பு ஒன்றை செய்திருந்தனர்.

மாலை 5.30 அளவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் ஒன்று கூடிய சைவ அமைப்பின் பிரதிநிதிகள் குறித்த கவனயீர்ப்பை செய்திருந்தனர்.

இதன் போது வெடுக்குநாறி எங்கள் சொத்து, வெடுக்குநாறியில் உடைத்த ஆதிலிங்கத்தை மீள பிரதிஸ்டை செய், வெடுக்குநாறியில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டிக்கிறோம் போன்ற கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

இதேவேளை குறித்த சம்பவத்தை கண்டித்து வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் நாளைய தினம் பாரிய போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.