வடகொரியாவுடன் நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயார்!

வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டுமென அமெரிக்காவும், தென் கொரியாவும் வலியுறுத்தியுள்ளன.வடகொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி சங் கிம், கொரிய தீபகற்பத்துக்கான தென் கொரியாவுக்கான சிறப்புப் பிரதிநிதி நோ கியு-டுக்கை சியோலில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த சந்திப்புக்கு பிறகு கருத்து தெரிவித்த வடகொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி சங் கிம்,‘வடகொரியாவின் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடியை அளிக்க வேண்டும் என ஒப்புக்கொண்டுள்ளோம். வடகொரியாவுக்கான எதிரான நோக்கம் எதுவும் இல்லை.அந்த நாட்டுடன் எந்த நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது. வடகொரியாவும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும்’ என கூறினார்.நிகழாண்டில் 13ஆவது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓர் ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.