அமெரிக்காவின் இராணுவ உதவிகள் தற்போது உக்ரேனை நோக்கி புறப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் அன்ரனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
உக்ரேனுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ள அன்ரனி பிளிங்கன், அந்த நாட்டு ஜனாதிபதி வெலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதங்கள் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரேனுக்கான இராணுவ உதவிகளில் ஒரு தொகுதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்றுமொரு தொகுதி எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பபெறுமென அன்ரனி பிளிங்கன் உறுதியளித்துள்ளார்.
இந்த இராணுவ உதவிகளை வழங்குவதற்கான அனுமதி கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க நிதியுதவியுடன் கூடிய இராணுவ உதவியில் வான் பாதுகாப்பு இடைமறிப்பான்கள், பீரங்கிகள் மற்றும் நீண்ட தூர துல்லியமான வழிகாட்டுதல் ஏவுகணைகள் ஆகியவை அடங்கும் என அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் அருகே பாரிய ரஷ்ய ஊடுருவலைத் தடுப்பதற்கான போர் இடம்பெறும் நிலையில் அமெரிக்காவின் இராணுவ உதவி உக்ரேனை நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.