பெலிஸில் (Belize) சிறிய ரக பயணிகள் விமானத்தை கத்தி முனையில் கடத்திய நபரை பயணி ஒருவர் நடுவானில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மத்திய அமெரிக்கா (United States) நாடான பெலிஸின் கொரோசல் நகரத்திலிருந்து, சிறிய ரக விமானம் ஒன்று, சான் பெட்ரோ நகருக்கு புறப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் 14 பயணிகள் உட்பட 16 பேர் பயணம் செய்துள்ளனர்.
நடுவானில் விமானம்
உள்ளூர் நேரப்படி காலை 8;30 மணியளவில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, 50 வயது மதிக்கத்தக்க நபர், கத்தியை காட்டி பயணிகள் மற்றும் விமானிகள் மிரட்டியுள்ளார்.
இந்த நாட்டிலிருந்து தன்னை வெளியே கொண்டு சென்று விடுமாறு விமானிகளை மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் ஒரு விமானி மற்றும் 2 பயணிகளை கத்தியால் குத்தியுள்ளார்.
கத்தியால் குத்தப்பட்ட பயணி ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து, விமானத்தை கடத்த முயன்ற நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
தீவிர சிகிச்சை
குண்டு பாய்ந்த அந்த நபர், விமானத்தில் சரிந்து விழுந்தார். ஏறத்தாழ 2 மணி நேரம் சீரற்ற முறையில் வட்டமிட்ட பிறகு, விமானம் பாதுகாப்பாக பிலிப் எஸ்டபிள்யூ கோல்ட்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
கத்தியால் குத்தப்பட்ட விமானி மற்றும் 2 பயணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயணி ஒருவருக்கு நுரையீரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், விமானத்தை கடத்த முயன்ற நபர், அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த அகின்யிலா சா டெய்லர் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் என்ன காரணத்திற்காக விமானத்தை கடத்த முயற்சி செய்தார் என விசாரணை நடைபெற்று வருகிறது