ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் அமெரிக்கா : ஆயத்த நிலையில் இஸ்ரேல்

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான்  தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் அமெரிக்கா எச்சரிக்கை நிலையில் உள்ளது.

 
மத்திய கிழக்கில் அமெரிக்க அல்லது இஸ்ரேலிய இலக்குகளை குறி வைக்கும் சாத்தியமான ஈரானிய தாக்குதலை எதிர்பார்த்து அமெரிக்கா பதற்றத்தில் உள்ளது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல்  விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்த பதற்ற நிலை உருவாகியுள்ளது.


இந்த தாக்குதலில் 13 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில், இதில் 7 ஈரானிய புரட்சிகர ராணுவ படை வீரர்களும் அடங்குவர்.

ஈரானுக்கு ஒரு செய்தியாகப் பார்க்கப்படும் இந்த இஸ்ரேலிய தாக்குதல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை கணிசமாக அதிகரித்துள்ளது.

ஈரானின் உயர் இராணுவ அதிகாரி ஜெனரல் ஹோசைன் சலமி உட்பட ஈரான் அதிகாரிகள், "தீர்க்கமான பதிலடி" கொடுப்பதாக உறுதி பூண்டுள்ளனர்.

இந்நிலையில் ஈரான் இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் இலக்குகளாக அமெரிக்க ராணுவ தளங்கள் அல்லது தூதரகங்கள், அதே போல் இஸ்ரேலிய கட்டமைப்புகள் ஆகியவை இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா கூடுதல் படைவீரர்கள் மற்றும் போர்க்கப்பல்களை களமிறக்குவது உட்பட, இந்த பிராந்தியத்தில் தனது ராணுவ பலத்தை முன்னெச்சரிக்கையாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் ஈரானின் பதிலடி தாக்குதல் எச்சரிக்கை குறித்து தொலைபேசி வாயிலாக முக்கிய உரையாடலை நடத்தியுள்ளார்.

மேலும், "நாங்கள் இந்த சூழ்நிலையை நெருக்கமாகக் கண்காணித்து வருகிறோம். ஈரான் பதிலடி கொடுக்க முயற்சித்தால், நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.