இஸ்ரேலின் உக்கிர தாக்குதலுக்கு மத்தியில் காசாவில் அவசர போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா புதிய தீர்மானம்


காசாவில் இஸ்ரேலின் உக்கிரத் தாக்குதல்கள் நேற்று (21) 167 ஆவது நாளாகவும் தொடர்ந்ததோடு போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் இன்றி நீடிக்கும் சூழலில், அவசர போர் நிறுத்தத்தை கோரும் நகல் தீர்மானம் ஒன்றை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது.

பணயக்கைதிகளின் விடுதலையைப் பெறும் வகையிலும் தீர்மானத்தை அமைத்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் கூறியுள்ளார். இதற்கு உலக நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


சவூதி அரேபியாவுக்குச் சென்ற அவர் போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். காசாவில் போர் ஆரம்பித்ததில் இருந்து ஆறாவது முறையாக அவர் மத்திய கிழக்கு வட்டாரத்துக்கு சென்றுள்ளார்.

இஸ்ரேலின் முக்கிய கூட்டாளியாக இருக்கும் அமெரிக்கா காசா விவகாரத்தில் முன்னர் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் மீது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது.
எனினும் அண்மைய வாரங்களில் அது போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு இஸ்ரேலுக்கு அழுத்தங்களை அதிகரித்துள்ளது.

முன்னதாக கடந்த பெப்ரவரியில் அல்ஜீரிய கொண்டுவந்த அவசர போர் நிறுத்தத்திற்கான தீர்மானத்தின் மீது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய அமெரிக்கா மாற்று நகல் தீர்மானம் ஒன்றை கொண்டுவர முயற்சித்து வந்தது.


இந்த மாற்றுத் தீர்மானத்தில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு நிகராக ஆறு வார போர் நிறுத்தம் ஒன்று பற்றி வலியுறுத்தப்பட்டிருக்கும் நிலையில் பாதுகாப்புச் சபையின் ஆதரவு கிடைப்பதற்கு குறைவான வாய்ப்பே இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இது வாக்கெடுப்புக்கு விடப்படும் திகதி பற்றிய விபரம் வெளியாகவில்லை.

இந்நிலையில் ஆரம்பத்தில் சவூதி அரேபியா சென்று அந்நாட்டு முடிக்குரிய இளவரசரை சந்தித்த பிளிங்கன் தொடர்ந்து எகிப்து சென்று அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து விட்டு இஸ்ரேல் செல்லவுள்ளார்.

கட்டாரில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்று வரும் நிலையிலேயே அமெரிக்காவின் இந்த நகல் தீர்மானம் வெளியாகியுள்ளது.

எனினும் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு ஹமாஸ் அமைப்பு சமர்ப்பித்த முன்மொழிவுக்கு இஸ்ரேல் பாதகமாக பதில் அளித்திருப்பதாக மூத்த ஹமாஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.