Update: துருக்கி - சிரியாவில் பலி எண்ணிக்கை 5000 ஐ கடந்தது - உலக நாடுகள் உதவிக்கரம்


நில அதிர்வுகளால் துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளிலும் 5,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, துருக்கியின் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தது 3,419 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த நாட்டின் துணை ஜனாதிபதி ஃபுவாட் ஒக்டே கூறினார்.

மேலும் 20,534 பேர் காயமடைந்துள்ளதுடன், சுமார் 6,000 கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, சிரியாவில் பலி எண்ணிக்கை 1,602 ஆக உயர்ந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துருக்கியின் அனர்த்த மற்றும் அவசரகால முகாமைத்து ஆணைக்குழுவின் சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின் படி, 24,400 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பணியாளர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றனர்.

எவ்வாறாயினும், உறைபனி நிலைமைகள் மற்றும் மழை காரணமாக இந்த முயற்சிகளுக்கு தடங்கல் ஏற்படலாம் என்ற கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோவிலிருந்தும், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், ஈராக், ஈரான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கிரீஸ், பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் இருந்தும் உதவிகள் கிடைப்பெற்றுவருவதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.