எகிப்து மற்றும் கட்டாரில் இடம்பெற்று வரும் காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் காசா நகரில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் புதிய தாக்குதல்களால் வீதிகளில் மீட்கப்படாது உடல்கள் குவிந்து கிடப்பதாகவும் குடியிருப்பாளர்கள் வீடுகளில் சிக்கி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசா நகரில் இஸ்ரேல் ஆரம்பித்திருக்கும் பாரிய தாக்குதல்கள் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறாக அமையும் என்று ஹமாஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.
போருக்கு முன்னர் காசா மக்கள் தொகையில் கால் பங்குக்கும் அதிகமானவர்கள் வசித்து வந்த காசா நகர், கடந்த ஆண்டு போர் வெடித்து சில வாரங்களிலேயே அழிக்கப்பட்டது. எனினும் ஆயிரக்கணக்கான மக்கள் தமது இடிந்த வீடுகளுக்கு திரும்பினர். அவர்களை மீண்டும் வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
காசா நகரின் அல் ஹவா மற்றும் சப்ரா பகுதிகளில் உள்ள மக்கள் தமது வீடுகளுக்குள்ளேயே சிக்கியும் கொல்லப்பட்டும் இருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அல் ஹவா மற்றும் ரிமால் பகுதிகளில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அங்குள்ள வீதிகளில் இருந்து சடலங்களை மீட்க முடியாதுள்ளதாகவும் காசா சிவில் அவசர சேவை தெரிவித்துள்ளது.
இதேவேளை காசா நகரில் இருந்து வெளியேறும் பொதுமக்கள் மீது இஸ்ரேலிய ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகள் சூடு நடத்துவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காசா நகரில் உள்ள யார்முக் அரங்கை கடந்து செல்ல திட்டமிட்டபோதும் இஸ்ரேலிய ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்ட பலஸ்தீனர்களின் உடல்கள் வீதிகளில் இருப்பது பற்றி அறிவுறுத்தப்பட்டதாக பெண் ஒருவர் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.