இஸ்ரேலியப் படை காசாவில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் ஐ.நா முகாம்கள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதோடு தெற்கு முனையான ரபா நகரில் இஸ்ரேலிய டாங்கிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னேற்றம் கண்டு வருகின்றன.
இஸ்ரேலினால் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதி அதேபோன்று ஐக்கிய நாடுகளால் நடத்தப்படும் மற்றொரு பாடசாலை மீது இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 42 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய நுஸைரத் அகதி முகாமில் உள்ள ஐ.நாவின் அல் ராசி பாடசாலை மீதே கடந்த செவ்வாய்க்கிழமை (16) இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இங்கு ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று தெற்கில் அல் மவாசி பகுதியில் உள்ள சந்தை ஒன்றுடன் இணைக்கப்பட்ட பிரதான வீதி மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது.
அல் ராசி பாடசாலையில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு அல் மவாசியில் மேலும் 17 பேர் பலியானதாக காசா அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் 70க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதில் அல் ராசி மீதான தாக்குதல் கடந்த 10 நாட்களில் ஐ.நா. மற்றும் அதன் நிறுவனங்களுடன் தொடர்புபட்ட பாடசாலைகள் மீது இஸ்ரேல் நடத்தும் ஆறாவது குண்டு மழையாக இது இருந்தது. இந்தத் தாக்குதல்களில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒன்பது மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் மோதல்களில் காசாவில் உள்ள சுமார் 70 வீதமான ஐ.நாவால் நடத்தப்படும் பாடசாலைகள் தாக்கப்பட்டுள்ளன என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது