உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து சீன ஜனாதிபதியுடன் விவாதிக்க உக்ரைன் ஜனாதிபதி விருப்பம்!

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சீனாவின் முன்மொழிவுகள் குறித்து விவாதிக்க, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் முதலாம் ஆண்டு விழாவில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு விருப்பம் தெரிவித்தார்.

அமைதிக்கான தேடலில் சீனா ஈடுபட்டிருப்பதை இந்த முன்மொழிவு அடையாளம் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.ரஷ்யாவிற்கு சீனா ஆயுதங்களை வழங்காது என்று தான் உண்மையில் நம்ப விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.ரஷ்யா தனது படைகளை உக்ரைனிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று சீனா குறிப்பாகக் கூறவில்லை என்றாலும் சீனாவின் அமைதி திட்டங்களை ரஷ்யா பாராட்டியது.

இந்த வார தொடக்கத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாகக் கூறினார்.இந்த கூற்றை சீனா கடுமையாக மறுத்தது. அமெரிக்க ஊடகங்கள் மீண்டும் சீன அரசாங்கம் ரஷ்யாவிற்கு ஆளில்லா விமானங்கள் மற்றும் பீரங்கி குண்டுகளை அனுப்ப பரிசீலித்து வருவதாக தெரிவித்தது.