உக்ரைனுக்கு மறைமுகமாக உதவும் ஐரோப்பிய நாடு..! அம்பலப்படுத்த மறுக்கும் ஆயுத வியாபாரி

பெல்ஜியதிற்கு சொந்தமான Leopard 1 டாங்கிகளை ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் உக்ரைனிய இராணுவத்திற்காக ஐரோப்பிய நாடு ஒன்று வாங்கியுள்ளதாக அவற்றை விற்பனை செய்த ஆயுத வியாபாரி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடு ஒன்று இது தொடர்பில் தம்மை நாடியதாகவும், முதற்கட்டமாக 49 டாங்கிகளை வாங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த ஐரோப்பிய நாடு, இந்த வர்த்தகத்தை முன்னெடுத்துள்ளது என்பதை அவர் கூற மறுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அந்த டாங்கிகளுக்காக அந்த ஐரோப்பிய நாடு செலவிட்ட தொகை தொடர்பிலும் தம்மால் வெளிப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த டாங்கிகள் உக்ரைன் போர்க்களத்தில் பயன்பாட்டுக்கு வந்து 6 மாதங்களாகியுள்ளது எனவும் அந்த ஆயுத வியாபாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதே நபர், தலா 37,000 யூரோ தொகை மதிப்பில் 50 Leopard 1 டாங்கிகளை ஏற்கனவே பெல்ஜியத்திடம் இருந்து வாங்கியிருந்தார். ஆனால் குறித்த 50 டாங்கிகளும் ஜேர்மனி ஆயுத வியாபாரி ஒருவருக்காக வாங்கப்பட்டது என பின்னர் தெரியவந்தது.

அந்த ஜேர்மன் ஆயுத வியாபாரி பெரும்பாலும், உக்ரைனுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்துவருபவர் என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த நிலையில், உக்ரைனை ஆதரிக்கும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் Leopard 2 டாங்கிகளை அந்த நாட்டுக்கு அளிக்க ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.