ஜெலென்ஸ்கியின் சொந்த நகரத்தின் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்

உக்ரைன் அதிபர் வெலோடிமீர் ஜெலென்ஸ்கியின் சொந்த நகரத்தின் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் இதுவரை குறைந்தது 6 பேர் பலியாகியுள்ளதுடன், 25 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைனின் Kryvyi Rih நகர் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் தொடர்மாடி பொதுமக்கள் குடியிருப்பு உட்பட பொது உட்கட்டமைப்புக்கள் சேதமடைந்துள்ளதாக Dnipropetrovsk பிராந்திய ஆளுநர் Serhiy Lisak தெரிவித்துள்ளார்.

ஐந்து மாடிக் கட்டடமொன்று அழிவடைந்துள்ளதுடன், 25 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உக்ரைன் அதிபர் வெலோடிமீர் ஷெலென்ஸ்கி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

ரஷ்ய பயங்கரவாதிகளின் இந்தச் செயற்பாடுகளுக்கு மன்னிப்பே கிடையாது எனவும் ஒவ்வொரு ஏவுகணைத் தாக்குதல்களுக்கும் பொறுப்புக் கூறச் செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஏனைய பகுதிகள் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெர்கீவ் நகர் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், தலைநகர் கீயேவ் மீதான தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் குறித்து ரஷ்யா இதுவரை எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை.

நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உக்ரைய்ன் பதில் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, உக்ரைன் - மோக்ரி யாலி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை ரஷ்ய ஆக்கிரமிப்புப் படையினா் குண்டுவீசி தகா்த்துள்ளதாக கொசான் பிராந்திய படைப் பிரிவு செய்தித் தொடா்பாளா் வேலரி ஷொஷென் கூறியுள்ளார்.

ஆக்கிரப்புப் பகுதிகளில் எதிா்த் தாக்குதல் நடத்தி தங்களது படையினா் முன்னேறி வருவதைத் தடுப்பதற்காக இந்தச் செயலில் ரஷ்யா ஈடுபட்டதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.

இதன் காரணமாக அந்த நதியின் இரு கரைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மோக்ரி யாலி நதிக் கரையோர ஆக்கிரப்புப் பகுதிகளில் எதிர்த் தாக்குதல் நடத்தி உக்ரைன் படையினா் முன்னேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமது முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைப்பதற்காக அந்த அணையை ரஷ்யா தகா்த்துள்ளது. எனினும், ரஷ்யாவின் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. உக்ரைன் இராணுவத்தின் முன்னேற்றம் தொடா்கிறது என அவர் கூறியிருக்கிறார்.