ஒரேநாளில் பிரித்தானியாவுக்குள் நுழைந்த 1295 குடியேறிகள் - வரலாற்றில் புதிய உச்சம்


பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக ஆங்கிலக் கால்வாயை சிறிய படகுகளில் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கையில் நேற்று புதிய உச்சமான பதிவு கிட்டியுள்ளது.

நேற்று மட்டும் 1,295 பேர் படகுகளில் பிரித்தானிய கரையை எட்டியுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் ஒரேநாளில் நுழைந்த 1,185 என்ற சாதனையை இந்தத் தொகை தற்போது முறியடித்துள்ளது.

2022 ஆண்டில் இதுரை கடந்த எட்டுமாத காலத்தில் மட்டும் , சட்டவிரோத குடியேறிகள் ஆங்கிலக் கால்வாய்வாயை 22,670 தடவைகள் சிறிய படகுகளில் கடந்துள்ளனர்.

இந்தப் பின்னணியில் இவ்வாறு சிறிய படகுகளில் நுழைந்தவர்களின் எண்ணிக்கையில் நேற்று புதிய உச்சபதிவு கிட்டியுள்ளது.

புதிய நிலைமையானது பிரெக்சிற் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின்னர் பிரித்தானியாவின் எல்லைகள் கடுமையாக்கப்படும் என உறுதியளித்த ஆளும் கட்சிக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறத்தே இந்த நிலைமை பிரித்தானியாவுக்கு பிரான்சுக்கும் இடையே பதற்றங்களையும் அதிகரித்துள்ளது.

சட்டவிரோத குடியேறிகள் வருவதை தடுப்பதற்கு பிரான்ஸ் முறையான நடவடிக்ககைகளை எடுக்கவில்லையென பிரித்தானியா குற்றம் சாட்டும் அதேவேளை, பிரித்தானியாவின் தளர்வான சமூசநல உதவித்திட்டங்களே இவ்வாறு குடியேறிகளை ஈர்க்கவைப்பதாக பிரான்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த நிலையில், நேற்று மட்டும் 27 படகுகளில் மொத்தமாக 1,295 பேர் பிரித்தானிய கரையை வந்து சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக வரும் குடியேற்றவாசிகளை மீள்குடியேற்றத்திற்காக ருவாண்டாவிற்கு அனுப்பும் பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய திட்டங்களும் சட்ட சவால்கள் காரணமாக ஏற்கனவே தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.