இருவர் உயிரிழப்பு, 12 பேர் சிகிச்சை பிரிவில் : காலநிலை மாற்றத்தினால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குருநாகல் மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலையால் வறண்டு கிடக்கும் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள் சிலர் திடீர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கனேவத்த ஹிரிபிட்டிய கிரிந்திவெல்கால தொராதத்த குளத்தில் மீன் பிடித்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கிரிந்திவெல்கால பிரதேசத்தைச் சேர்ந்த அமில அஜந்த குமார மற்றும் ஜீவன் சதுரங்க ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞர்களின் சடலங்களில் இருந்து எடுக்கப்பட்ட உடல் பாகங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பில் உள்ள அரச மருத்துவ ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மரணத்திற்கான குறிப்பிட்ட காரணங்களை கண்டறிய இவற்றினை அனுப்பியதாக வைத்தியர் சந்தன கஞ்சங்கமுவ குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் 12 இளைஞர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருதாக தெரிவிக்கப்படுகின்றது.

நோய்வாய்ப்பட்டவர்களின் சுகவீனம் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்பட்டால், மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மூலம் அது தொடர்பான குறிப்பிட்ட நோயை கண்டறிய முடியும் என பிராந்திய சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கிடையில், ஏரியில் எஞ்சியிருக்கும் மீன்களும் இறந்து கிடப்பதால், அந்த மீன்களை சாப்பிட வேண்டாம் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குறைந்த நீருடன் காணப்படும் ஏரிகளுக்கு மீன்பிடிப்பதற்கும், குளிப்பதற்கும் மக்கள் வருவதால் இவ்வாறு எலிக்காய்ச்சல் அதிகம் பரவும் ஆபத்து காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே குறைந்த நீர் உள்ள ஏரிகளில் இருந்து நீர் அருந்துவதை தடுக்குமாறும், நீச்சல், மீன்பிடித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.