அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்பு தொடர்பான மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் என சீனா உறுதிபட தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன அரசின் வர்த்தகத்துறை செயலாளர் ஹே யோங்கியான் தெரிவிக்கையில்,
அமெரிக்கா உடன் மோதலை நாங்கள் விரும்பவில்லை. அதேநேரத்தில் அந்நாட்டின் நெருக்கடிக்கு அடி பணிய மாட்டோம். சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.
பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா விரும்பினால், அதற்கு சீனா தயாராக உள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை பரஸ்பரம் சமத்துவம் மற்றும் மரியாதை அடிப்படையில் இருக்க வேண்டும்.
ஆனால், மிரட்டல், நெருக்கடி மற்றும் அழுத்தம் ஆகியவற்றின் மூலம் சீனாவை கையாள்வது சரியான முடிவு கிடையாது.
வர்த்தக போரில் யாரும் வெற்றி பெறப்போவது இல்லை. அமெரிக்கா தனது சொந்தப் பாதையில் பயணிக்க முடிவு செய்தால், சீனாவும் இறுதி வரை போராடும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை மொத்தம் 145 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள 60 நாடுகள் மீது ட்ரம்ப் நிர்வாகத்தின் 10வீத முதல் 50வீத வரையிலான வரிகள் நேற்று முன்தினம் நடைமுறைக்கு வந்தன. இதில் சீனப் பொருட்களுக்கு 104வீத வரி விதிக்கப்பட்டது.
இருப்பினும், அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 34வீத வரி விகிதத்தை நேற்று முதல் 84வீதமாக அதிகரிக்க சீனா முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், வரி உயர்வுக்கு பதிலளிக்கும் விதமாக, சீன இறக்குமதிகள் மீதான 104வீத வரியை 125வீதமாக அதிகரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, முந்தைய 20வீத வரி உட்பட அனைத்து வரிகளின் மொத்தம் 145வீதம் என்று வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், ட்ரம்ப் சுமார் 60 நாடுகள் மீதான தனது "தீர்வை வரிகளை" 90 நாள் இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் கனடாவில் டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டின்களில் அடைக்கப்பட்ட ஒர் உணவுப் பொருளின் விலை 40 சதங்களினால் உயர்வடையும் என ஒன்டாரியோவில் இயங்கும் முக்கிய உணவுப் பொருள் பதப்படுத்தும் நிறுவனங்களில் ஒன்றான சன் பிரைட் புட்ஸ் இன்ங் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதேநேரம் தற்போதைய வரிகளால் ஒவ்வொரு அமெரிக்க குடும்பமும் ஆண்டுக்கு 4,400 டொலர் அதிகமாக செலவிட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது 1909 ஆம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்க நுகர்வோர் சராசரியாக 25.3 சதவீத வரியை எதிர்கொள்கின்றனர்.
--