இஸ்ரேலின் பாராளுமன்றில் உரையாற்றிய ட்ரம்ப் : இரு எம்.பி.க்களின் செயலால் பரபரப்பு

 

இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று உரையாற்றி கொண்டிருந்தபோது குறுக்கிட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு அதிகாரிகளால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய பணயக்கைதிகளில், இருபது பேர் நேற்று இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இரண்டு ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வரலாற்று நிகழ்வு, இஸ்ரேல் முழுவதும் பல இடங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் தங்கள் கண்களால் அதைக் காண முக்கிய நகரங்களில் கூடியிருந்தனர்.

இதன்படி, குறித்த வரலாற்று நிகழ்வில் கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று நான்கு மணி நேர குறுகிய பயணமாக இஸ்ரேலை சென்றடைந்தார். அப்போது, இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றையும் ட்ரம்ப் நிகழ்த்தினார்.


இதன்போது, குறுக்கிட்ட இரண்டு எம்பிக்கள் அவரை கடுமையாக விமர்சித்து பாலஸ்தீனத்தை அங்கீகரிக்குமாறு கூச்சலிட்டுள்ளனர்.

எம்பிக்கள் இருவரிடமிருந்த பதாகைகள் பறிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் இழுத்துச் செல்லப்பட்டனர்.

ட்ரம்ப் தலைமையிலான சர்வதேச சமூகத்தின் தீவிர முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளமையால் மத்திய கிழக்கு பிராந்தியம் இன்று அமைதியின் விடியலைக் கண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.