கனடா - பிரம்டனில் திறந்து வைக்கப்பட்ட "திருகோணமலை பூங்கா"



திருகோணமலை மண்ணையும் கனடா வாழ் தமிழ் மக்களையும் பெருமைப்படுத்தும் வகையில் Trincomalee Park என்ற திருகோணமலை பூங்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை 11/06/2023 அன்று பிரம்டன் நகரசபையால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மிகவும் விமர்சையாக நடைபெற்ற இந்த பூங்கா திறப்பு விழாவை பிரம்டன் நகரசபை நடத்தி முடிக்க தொடர்ந்து நடைபெற்ற ஒன்றுகூடலை “Trinco vision” அமைப்பு சிறப்பாக செய்து முடித்து இருந்தது.

பிரம்டன் நகரசபையால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த பூங்கா திறப்பு விழாவில், பிரம்டன் மாநகர முதல்வர் பட்றிக் பிறவுன் (Mayor Patrick Brown), அந்த தொகுதியின் வட்டார பிரதிநிதி மைக்கல் பலீயச்சீ (Michael Palleschi Regional Councillor - Ward 2&6) மற்றும் அந்த தொகுதியின் மற்றுமொரு வட்டார பிரதிநிதியான நவ்ஜீட் கார் (Navit Kaur Brar Regional Councillor - Ward 2&6) ஆகியோர் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்வில் மாநகரசபை முதல்வர் பட்றிக் பிறவுன் (Mayor Patrick Brown) தனது உரையின் போது,

"இலங்கையின் யாழ்ப்பாணம் திருகோணமலை பகுதியில் அதிக அளவான தமிழ் மக்கள் வசிப்பது போல் எமது மாநகரத்திலும் அநேகமான கனேடிய தமிழர்கள் வசிக்கின்றார்கள்” என்பதை குறிப்பிட்டு “திருகோணமலை நகரத்துடன் பிரம்டன் நகரசபையின் தொடர்பு என்றும் இருக்கும்” எனவும் தெரிவித்தார்.

இந்த பூங்காவிற்கு பெயர் வைத்த பின்ணணியில் “Trinco vision” அமைப்பின் பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றே ஆகும்.

பிரம்டன் முதல்வருடனான ஆரம்ப பேச்சுக்களில் ஆரம்பித்து நகரசபையின் அங்கீகாரம் பெறும் வரை ஒருங்கமைக்கப்பட்ட இதன் பின்ணணியில் உழைத்த “Trinco vision” அமைப்பின் ரெஜினோல்ட் அந்தோணிப்பிள்ளை மற்றும் கிறிஸ் சிவகுரு ஆகியோரின் பங்களிப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும் .

மேலும், இந்த “Trinco vision” அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த விழாவிற்கு அமெரிக்காவில் இருந்தும் கியூபெக் ஹலிஃபேக்ஸ் போன்ற பிற மாகணங்களில் இருந்தும் திருகோணமலை மக்கள் இந்த நிகழ்வுக்கு வந்து சிறப்பிதுள்ளார்கள்.

குறித்த நிகழ்வானது “Trinco vision” அமைப்பிற்கு பலம் சேர்த்ததோடு திருகோணமலை மண்ணுக்கு பெருமையும் சேர்த்ததுள்ளது.