அத்துமீறும் இந்திய மீனவர்களால் வாழ்வாதரத்தை இழக்கும் வடக்கு மீனவர்களின் சோகம்

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்டகாலமாகவே ஒரு தொடர் கதையாக உள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமான பிரச்சினை, இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையினால் வேறு பரிணாமத்துக்குள் நகர்ந்துள்ளது. 

இந்திய மீனவர்கள் கடலடியில் வாரிச் செல்லும் பை போன்ற மிகப்பெரிய வலையான  இழு வலை மடியை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இதனால் கடல் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், வட மாகாணத்தில் உள்ள மீனவர்களையும் நேரடியாக பாதிக்கிறது. 


இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடல் பகுதியில் இழுவலை மடியைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதால், இலங்கை மீனவர்களின் வலைகள் சேதம் அடைகின்றன. இது வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்பதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.


இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் நடவடிக்கையானது, இரு நாட்டு மீனவர்களிடையே அவ்வப்போது முரண்பாடுகளையும் தோற்றுவிக்கின்றது. 

இதனால் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தேசிய மட்டத்திலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் விடுவிக்கப்படுவதும் தொடர்கதையாக நீடிக்கிறது.


இவ்வாறான ஒரு நிலமையில் வடமராட்சி கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்களால் தமது வலைகள் அறுக்கப்பட்டுகிறது என பருத்தித்துறை மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


அண்மை நாட்களாக பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி இந்திய மீனவர்கள் இழுவைமடி படகுகளின் மீன்பிடி அதிகரித்துள்ளதாக இந்த மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நாளாந்தம் தமது வலைகள் அறுத்தழிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் இழுவைப்படகுகளால் அறுத்தழிக்கப்படுவதுடன் வலைகள் காணாமல் போகின்றது.

அத்துடன் உள்ளூரில் சட்டவிரோத மீன்பிடியான சுருக்குவலைத் தொழில் நடவடிக்கையால் தமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாக இந்த மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


இவ்வாறான பிரச்சினைகளை கட்டுப்படுத்த மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மீனவர்களின் அத்துமீறலையும் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், இல்லாத பட்சத்தில் தமது குடும்ப பொருளாதார நிலைமைகள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, நாளாந்த வாழ்வாதரத்தை இழக்க நேரிடுமென கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினரும் கவலை தெரிவிக்கின்றனர்.