மட்டக்களப்பு எல்லைக்குச் சென்று திரும்ப முடியாத நிலையில் தமிழர்கள்

மட்டக்களப்பு நகருக்கு மேற்கே 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய காணிகளான கால்நடை வளர்ப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மயிலத்தமடு மாதவனை பகுதிகளுக்கு தமிழர்களால் சென்று திரும்ப முடியாத நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

நேற்றைய தினம் (22) மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள கால் நடை பண்ணையாளர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்காக சென்று திரும்பிய மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தினைச் சேர்ந்த மும் மத தலைவர்களையும் அவர்களுடன் சென்ற ஊடகவியலாளர்களையும் அந்தப் பகுதியில் செயற்படும் பௌத்த பிக்கு தலைமையிலான சட்டவிரோத காணி அபகரிப்பாளர்களினால் சுமார் நான்கு மணி நேரம் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவமானது ஒட்டு மொத்த மட்டக்களப்பு மாவட்ட சமூகமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவமாக பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு மாவட்டத்தின் மூன்று சமயப் பெரியார்களையும் ஒரு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் சிறைப்பிடித்து வைத்து கொண்டு இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர், நீதிமன்ற சட்டங்களுக்கு சவால் விடும் நிலையில், பௌத்த பிக்கு ஒருவர் செயற்படும் போது பிடித்து வைக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் பிக்குவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற விதம் இந்த நாட்டில் பௌத்த மதத்தவரை தவிர வேறு எந்த மதத்தவருக்கும் பாதுகாப்போ நீதியோ கிடைக்காது என்பதையே மிக ஆழமாக பதிவு செய்திருந்தது.

இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்காலம் குறித்து மாத்திரம் அல்ல, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 74 வீத பெரும்பான்மை தமிழர்களினது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் அவர்கள் வாழ்வதற்கான சுதந்திரம் குறித்தும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளை எழுப்பி இருந்தது.

மீண்டும் யுத்த காலத்தை நினைவுபடுத்திய இனவாதம்

நேற்று பிக்கு மற்றும் அவர்களுடன் வந்த சிங்கள காடையர்கள் செயற்பட்ட விதம், அவர்கள் இந்து குருக்களின் கொண்டையை பிடித்து இழுத்தமை, மதகுருமார் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி சாரதிக்கு அடிக்கச் சென்றமை, வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு பல மணிநேரம் மதகுருமார் கெஞ்சியும் சாவியை கொடுக்காது சுமார் 50 க்கு மேற்பட்டோர் சுற்றிவளைத்து நான்கு மணி நேரத்திற்கு மேல் சிறைப்பிடித்து வைத்துக்கொண்டு அவர்கள் பேசிய வார்த்தைகள் எல்லாம் இந்த நாட்டில் இனியும் சிறுபான்மை இன மக்கள் வாழமுடியாது என்ற உணர்வுகளையே பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊடகவியலாளர்களிடம் வெள்ளைப் பேப்பரில் கடிதம் எழுதச் சொல்லி அச்சுத்திய இனவாதிகள்

ஊடகவியலாளர்கள் எடுத்த புகைப்படங்கள், காணொளிகள் வெளிவந்தால் அந்தப் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத குடியேற்றம், சட்டவிரோத காடழிப்பு, குறித்த விபரங்கள் வெளிவரும் என்பதோடு அவர்களுடன் சேர்ந்து இயங்கும் மகாவலி அபிவிருத்தித் திணைக்களத்தின் பாதுகாப்பு உத்தியோத்தர்களின் சட்ட விரோத செயற்பாடுகளும் வெளிவந்து விடும் என்பதற்காக முழுக்க முழுக்க சட்ட விரோத குடியேற்ற வாசிகள் ஊடகவியலாளர்களையே இலக்கு வைத்தனர்.

ஊடகவியலாளர்களை சுற்றி வளைத்துக்கொண்டு அவர்களிடம் இருந்த புகைப்பட கருவிகள், தொலைபேசிகளை பறிப்பதற்கு முயற்சி செய்ததோடு ஊடகவியலாளர்களிடம் வெள்ளைப் பேப்பரில் கடிதங்கள் எழுதி கையெழுத்து வேண்டியும் எடுத்தனர்.

ஊடகவியலாளர்கள் எடுத்த புகைப்படங்கள் காணொளிகளை எங்கும் பிரசுரிக்க கூடாது என்று கூறி கடிதம் எழுதி கையெழுத்தும் வைக்க சொல்லி அச்சுறுத்திய சம்பவம் இலங்கையில் ஊடக சுதந்திரம் என்பது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறது.