யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த 25 வயது இளைஞரொருவர் கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார்
சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் (France) நாட்டிற்கு சென்ற வேளையிலே கோமஸ் அதிஸ்ரராஜா மிதுர்ஷன் என்ற இந்த இளைஞர் இவ்வாறு இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த இளைஞரின் சகோதரி பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் அவரது இடத்திற்கு தொழில் நிமித்தமாக செல்ல முயற்சித்துள்ளார்.
ரஷ்ய இராணுவம்
இதற்கமைய, 04.10.2024 அன்று பயணித்த இளைஞனுக்கு ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ரஷ்ய (Russia) விமான நிலையத்தில் தரையிறங்கிய இளைஞனுடன் முல்லைத்தீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரும் யாழ்ப்பாணம் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் பயணித்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் ரஷ்ய விமான நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல வேண்டுமென இவர்களை கூட்டிச் சென்ற முகவர் தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து அங்குள்ள இராணுவ முகாமில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு இவர்களுக்கு ரஷ்ய இராணுவத்தின் சீருடைகள் வழங்கி 15 நாட்கள் கட்டாயமாக பயிற்சியின் பின்னர் உக்ரையின் எல்லையில் போருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
குறித்த விடயம் தொடர்பாக குருநகர் பகுதியை சேர்ந்த கோமஸ் அதிஸ்ரராஜா மிதுர்ஷன் 25 வயது இளைஞன் தாயாருக்கு தனது புகைப்படங்களைத் பகிர்ந்து நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து தாயார் தனது மகனையும் ஏனையவர்களை மீட்பதற்கு ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மனு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
குறித்த பயணத்திற்காக முகவர் ஒருவருக்கு ஒவ்வொருவரும் தலா 60 லட்சம் ரூபாய் வரையான பணத்தை செலுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.