சேருவில படுகொலையின் 37ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று



முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை ஏற்றிவந்த 21பேர் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை - சேருவில படுகொலையின் 37ஆவது ஆண்டு நினைவுதினம் திருகோணமலை ஈச்சிலம்பற்று - பூநகர் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை கடைப்பிடிக்கப்பட்டது.

இதன்போது குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு, மலர்மாலை தூவி தீபமேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வை குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை சேருவில பகுதியில் இருந்து ஈச்சிலம்பற்று நோக்கி எடுத்து வரும்போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

அன்று நாட்டில் நிலவிய யுத்தசூழலின் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்கள் ஈச்சிலம்பற்று, பூமரத்தடிச்சேனை மற்றும் மாவடிச்சேனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தார்கள்.

இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் அரசாங்கத்தினால் சேருவில பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்டு வந்தன.

அந்தவகையில் 1986ஆம் ஆண்டு யூன் மாதம் 12ஆம் திகதி அகதிகளுக்கான நிவாரணங்களை வண்டில்களை கொண்டுவந்து ஏற்றிச் செல்லுமாறு அப்போது மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த வர்ணசூரிய அவர்களினால் மக்களுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் முகாம்களுக்கு பொறுப்பான அரச அதிகாரிகள் மூவர் உட்பட 21பேர் வண்டில் மாடுகளுடன் சேருவில நோக்கிச் சென்றார்கள்.

அங்கிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஈச்சிலம்பற்று நோக்கி வரும்போது மகிந்தபுரவில் வைத்து ஆயுதம் தாங்கிய நபர்களினால் இவர்கள் வழிமறிக்கப்பட்டு பிரதான வீதியில் இருந்து 50 மீற்றர் தூரம் அழைத்துச் செல்லப்பட்டு வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இதில் மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21பேர் படுகொலை செய்யப்பட்டதோடு மூன்றுபேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிர் தப்பியிருந்தார்கள்.