பிள்ளையான் குழு மறைத்து வைத்துள்ள பேரழிவு ஆயுதங்கள் : மற்றொரு சகா அதிர்ச்சி தகவல்

ரீ.எம்.வி.பி. என்று அழைக்கப்படும் 'பிள்ளையான் ஆயுதக் குழு' பெருமளவிலான ஆயுதங்களை மட்டக்களப்பில் மறைத்து வைத்துள்ளதாக அந்தக் குழுவில் அங்கம் வகித்த முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் குழுவின் பேச்சாளரும், நெருங்கிய சகாவுமான அசாத் மௌலானா CHANEL 4 சர்வதேச ஊடகத்திற்கு பிள்ளையான் பற்றிய பல இரகசியங்களை வழங்கியுள்ள நிலையில், பிள்ளையானின் மற்றொரு முக்கிய சகாவும், ரீ.எம்.வீ.பி. என்ற பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தருமான மற்றொரு உறுப்பினர் ஆயுதப் புதைப்பு தொடர்பான இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கல்குடா பேத்தாளை எல்லையிலுள்ள ஒரு தென்னந்தோப்பு, களுவாஞ்சிக்குடி கடற்கரையில் உள்ள மதுபானசாலை வளாகம், நாவலடியிலுள்ள கறுவாத் தோட்டம் போன்றனவற்றில் பெருமளவிலான ஆயுதங்களை பிள்ளையான் குழு புதைத்து வைத்ததாக அவர் சாட்சி பகர்கின்றார்.

கருணாவின் பின் பிள்ளையான் அரங்கேற்றிய கொலைகள்!! மிகப் பெரும் ஆதாரங்கள் சிக்கின

கருணாவின் பின் பிள்ளையான் அரங்கேற்றிய கொலைகள்!! மிகப் பெரும் ஆதாரங்கள் சிக்கின

2009.03.07 அன்று ரீ.எம்.வி.பி. என்ற 'பிள்ளையான் ஆயுதக் குழு' தங்கள் வசமிருந்த ஏராளமான ஆயுதங்களை இலங்கை இராணுவத்தினரிடம் பகிரங்கமாகக் கையளித்திருந்தது.

மட்டக்களப்பு வெபர் அரங்கில் இடம்பெற்ற அந்த ஆயுதக் கையளிப்பு நிகழ்வில் நூறுக்கும் மேற்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள், ரொக்கட் லோஞ்சர்கள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் என்று ஏராளமான ஆயுதங்களை அவர்கள் கையளித்திருந்தார்கள்.

பிரிகேடியர் பர்ணாண்டோ மற்றும் டி.ஜ.ஜி எடிஷன் குணதிலக்கவிடம் ஆயுதங்கள் கையளிக்கப்பட்டன. தமது உறுப்பினர்கள் அரசியல் நீரோட்டத்தில் கலக்க இருப்பதாகவும், பலர் வெளிநாடுசென்று பணிபுரிய உள்ளதாகவும் அந்த அமைப்பின் பேச்சாளர் அசாத் மௌலானா அறிவித்திருந்தார்.

ஆனால், சிறிலங்கா அரசபடைகளிடம் ஒப்படைக்காமல் ஏராளமான ஆயுதங்களை பிள்ளையான் குழு இரகசியமாக புதைத்துவைத்துள்ளதாக, அந்த அமைப்பில் நீண்டகாலம் செயற்பட்ட அந்த முக்கியஸ்தர் எமது செய்தியாளரிடம் தெரிவித்திருந்தார்.

“..2009ம் ஆண்டு காலப்பகுதிகளில் பெரும் தொகையிலான ஆயுதங்களை நாங்கள்; ‘D’ செய்தோம். கல்குடா பேத்தாளை எல்லையிலுள்ள தென்னந்தோப்பிலும், களுவாஞ்சிக்குடி கடற்கரை ஓரமாக உள்ள தென்னந்தோப்பில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு மதுபானக் கடையை அண்டிய தோப்பிலும், நாவலடியில் பிள்ளையான் குழு உறுப்பினர் ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற கறுவாத்தோட்டத்திலும் ஏராளமான ஆயுதங்கள் ‘D’ செய்யப்பட்டதை நான் நேரில் பார்த்தேன். நானும் அதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தேன்..’ என்று அவர் தெரிவித்திருந்தார். ‘D’ செய்வது என்றால் ‘Dump' செய்வது என்று பொருள். அதாவது புதைத்து வைப்பது.

அதேபோன்று திருக்கோவில் பிரதேசத்தில் சீலன் என்பவருடைய காணியிலும், ருத்திரா மாஸ்டர் என்பவருடைய வயலிலும், ஜெயந்தன் என்ற உறுப்பினருடைய தோட்டத்திலும் ஒரு தொகுதி ஆயுதங்கள் புதைக்கப்பட்டதாக தான் கேள்விப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த நபர்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக வைத்திய அத்தாட்சிப்பத்திரம் பெற்று, அவர்களை சட்டம் அணுகமுடியாதவாறு பாதுகாப்பு வலைப்பின்னலை உருவாக்கிவிட்டு, அவர்களது பாதுகாப்பில் ஆயுதங்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக அந்த உறுப்பினர் தெரிவித்தார்.

அத்தோடு பிள்ளையான் குழு மேற்கொண்ட பல்வேறு படுகொலைகள், ஆட்கடத்தல்கள் போன்றன பற்றிய விபரங்களையும் எமது ஊடகவியலாளரிடம் பகிர்ந்துள்ளார். பிள்ளையான் குழு மேற்கொண்ட கொலைகளுக்கு கட்டளையிட்ட, அவர்களைப் பாதுகாத்த சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சிலரது பெயர்களையும் அவர் தெரிவித்துள்ளார்.