விறுவிறுப்பான இறுதிக்கட்ட படப்பிடிப்பில் துணிவு-முக்கிய அப்டேட்!

ஹெச் வினோத் இயக்கி வரும் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் தற்போது இறுதி கட்டப் படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடைபெற்று வருகிறது.

நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு எச் வினோத் மற்றும் அஜித் மூன்றாவது முறையாக இணையும் படத்தின் முதல் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. துணிவு எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் போஸ்டரில் துப்பாக்கியுடன் அஜீத் இடம்பெறும் ஸ்டைலான புகைப்படமும் No Guts No Glory என்ற வாசகமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்தில் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வீரா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் தெலுங்கு நடிகர் அஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகி தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு இசையமைத்த ஜிப்ரான் துணிவு படத்திற்கு இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் பேங்காக்கில் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் சில காட்சிகள் எடுக்கப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி அருகே துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படப்பிடிப்பின் போது ஏராளமான ரசிகர்கள் அங்குக் குவிந்தனர். படப்பிடிப்பு தளத்தைப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் தற்போது இறுதிக் கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு Heist Thriller திரைப்படமாகத் தயாராகி வருவதாகத் தகவல் பரவியது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகியுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காணும் போது கொள்ளை சம்பவத்தை மையப்படுத்திய கதை என்பது உறுதியாகியுள்ளது. அதாவது 1987 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த மிகப்பெரிய நிஜ வங்கிக் கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதையை ஹெச் வினோத் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே எச். வினோத் இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான தீரன் அதிகாரம் ஒன்று படமும் உன்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. கள ஆய்வில் சிறந்து விளங்கக் கூடிய இயக்குநர் எச் வினோத் துணிவு படத்திற்கும் தன் கள ஆய்வை சிறப்பாகவே செய்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.