தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், கரூர் செல்ல அனுமதி கோரி தமிழ்நாட்டு பொலிஸாரிடம் மனு கையளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், "கடந்த சனிக்கிழமை விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, 41 உயிர்கள் பலியாகின.
அதற்காக மக்களை கரூர் வந்து நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காக அனுமதி கோரி, தலைவர் விஜய் ஒரு கடிதத்தை நேற்று மின்னஞ்சல் மூலமாக அனுப்பி உள்ளதுடன் குறித்த கடிதத்தை அவர் நேரிலும் இன்று கையளிப்பார்.
அதற்கு முன்னதாக விஜய், கூட்ட நெரிசலில் பலியான பாதிக்கப்பட்டவர்களின் தரப்புடன் காணொளி அழைப்பில் உரையாட வேண்டும் என்று விருப்பப்பட்டார்.
அதனால் நேற்று முன்தினம், நேற்று கரூரில் இருக்கும் 33 பேரிடம் அவர் அழைப்பு மூலமாக பேசினார், ஆறுதலை சொன்னார். என்னதான் ஆறுதல் சொன்னாலும் அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது.
இருந்தாலும் நான் வந்து உங்களுடன் இருப்பேன், விரைவில் நேரில் சந்திக்கிறேன் என்று தெரிவித்தார். இப்போது கரூரைச் சுற்றியுள்ள மற்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் காணொளி அழைப்பில் உரையாடுவார்” என குறிப்பிட்டுள்ளார்.