இந்திய நாடாளுமன்றத்துக்குள் தீடீர் பதற்றம்: தப்பியோடிய உறுப்பினர்கள்: கலோபரமான அவை (காணொளி) |

இந்திய நாடாளுமன்றத்திற்குள் இருவர் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய நாடாளுமன்ற கட்டடத்தின் மீது கடந்த 2001 ஆம் ஆண்டு லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது ஆயுத இயக்கங்களின் தாக்குதல் நடத்தப்பட்டு 22 ஆவது ஆண்டு நினைவுகூரப்படும் நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவையில் இன்று அலுவல் நடைபெற்று கொண்டிருந்த போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து திடீரென 2 பேர் கூச்சலிட்டு கொண்டே அத்துமீறி உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ளே குதித்தனர்.

சபாநாயகர் நோக்கி ஓடிய இருவரும் கைகளில் இருந்த கண்ணீர் புகை குண்டுகள் வீசியதை அடுத்து அவையில் இருந்த உறுப்பினர்கள் அச்சத்துடன் ஓடினர்.

கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதாக காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

வெளிவந்த புகை மஞ்சள் நிறமாக இருந்ததாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

அத்துமீறிய அந்த இருவரும் சில உறுப்பினர்களால் பிடிக்கப்பட்டு பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இருவர் புகை குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வெளியேயும் பதற்றம் நிலவியதுடன், அவர்களையும் காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.

பலத்த சோதனைகளுக்கு பின்னரே மக்களவைக்குள் பார்வயைாளர்கள் அனுமதிக்கப்படுகின்ற போதிலும் தற்போது கண்ணீர் புகை குண்டுகள் மக்களவைக்குள் கொண்டு சென்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளதோடு, நாடாளுமன்ற தாக்குதல் தினத்தன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை, புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.