காசாவில் ஏழு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் மூன்று ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீன நாடு ஒன்றை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.
அயர்லாந்து பலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் சிமொன் ஹரிஸ் நேற்று (22) அறிவித்த நிலையில் நோர்வே மற்றும் ஸ்பெயின் நாடுகளும் இதே முடிவை எடுத்துள்ளன.
‘அயர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்பெயின் நாடுகள் தாம் பலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக அறிவிக்கிறோம்’ என்று நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஹரிஸ் குறிப்பிட்டார்.
‘இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பல நாட்டு தலைவர்கள் மற்றும் சகாக்களுடன் நான் பேசினேன். எதிர்வரும் வாரங்களில் இந்த முக்கிய படியில் மேலும் பல நாடுகள் எம்முடன் இணையும் என்று நான் உறுதியாக உள்ளேன்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேல், பலஸ்தீனம் மற்றும் அந்த மக்களுக்கான அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஒரே நம்பகமான வழி இரு நாட்டுத் தீர்வாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி எதிர்வரும் மே 28 ஆம் திகதி பலஸ்தீனத்தை அயர்லாந்து உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக்கல் மார்டீன் எக்ஸ் சமூகதளதிற்கு தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினும் எதிர்வரும் மே 28 ஆம் திகதி பலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்சஸ் பாராளுமன்றத்தில் நேற்று அறிவித்தார். நோர்வே பிரதமர் ஜோனஸ் கார் ஸ்டோர், ஒஸ்லோவில் இருந்து இந்த அறிவிப்பை விடுத்தார்.
‘ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்திருக்கும் போருக்கு மத்தியில், அமைதி மற்றும் பாதுகாப்புடன் பக்கத்து பக்கத்தில் வாழும் இரு நாட்டு தீர்வாக இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்க மாற்று வழி ஒன்றை நாம் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டி உள்ளது’ என்று ஸ்டோர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த அறிப்பை அடுத்து இஸ்ரேல் அவசர ஆலோசனைகளுக்காக அயர்லாந்து மற்றும் நோர்வே தூதுவர்களை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது.
‘இது தொடர்பில் இஸ்ரேல் அமைதி காக்காது என்ற உறுதியான செய்தியை அயர்லாந்து மற்றும் நோர்வேயுக்கு வழங்குகிறோம்’ என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவை வரவேற்றிருக்கும் மேற்குக் கரையை தளமாகக் கொண்ட பலஸ்தீன வெளியுறவு அமைச்சு, முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது.