தையிட்டி விகாரை எதிர்ப்பு : முன்னணி - காவல்துறை பிடுங்குப்பாடு

தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்காமல் அமைதிகாக்கும் பட்சத்தில், தமிழ் இனத்தையே சில மக்கள் பிரதிநிதிகள் விற்பதற்கு தயங்க மாட்டார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி, நேற்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைக் கூறியுள்ளார்.

வலிகாமம் வடக்கு தையிட்டில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி, நேற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு உரிமை உள்ளதாக நீதிமன்றமே அறிவித்திருந்த நிலையிலும் சட்டவிரோதமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களை தாக்கிய, பலாலி காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி அராஜகமாகவும் மிகவும் கீழ்தரமாகவும் செயற்பட்டதாக முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வீதியோரத்தில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த தம்மை கைதுசெய்யப் போவதாகவும் குறித்த காவல்துறை அதிகாரி அச்சுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.