இதுதான் விதி..! ஜே.வி.பி.யின் கிளர்ச்சி நாளான இன்று இந்தியாவுடன் ஒப்பந்தம்


 

ஜே.வி.பி தலைமையிலான கிளர்ச்சியின் நினைவு தினமான ஏப்ரல் 5ஆம் திகதி, அரசாங்கம் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை உள்ளிட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைசாத்திடுகின்றது.  இது ஒரு விதியின் திருப்புமுனை என ஜேவிபியில் இருந்து பிரிந்த முன்னணி சோசலிச கட்சியின் பிரதம செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.

ஊடக மாநாடொன்றில் நேற்று  கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்த அவர்,


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம், எதிர்வரும் காலங்களில் இலங்கை தொடர்பில் பாரிய பிரச்சினைகளை உருவாக்கலாம்  

அத்துடன், மோடியின் விஜயத்தின் மூலம் பாதுகாப்பு ஒப்பந்தம், மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை தொடர்பான ஒப்பந்தம் உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கைசாத்தாகின்றன.

இவற்றின் மூலம், இலங்கை துறைமுகங்கள், திருகோணமலையில் உள்ள எண்ணெய் தொட்டி பண்ணைகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என மோடி எதிர்பார்ப்பார்.


இதேவேளை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் புவிசார் அரசியலைப் பொருத்தவரையில், இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ஆதிக்க மோதலில் ஈடுபட்டுள்ளன.

பாதுகாப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் மூலம் இலங்கையும் தேவையில்லாமல் புவிசார் அரசியலில் ஈடுபட வேண்டியிருக்கும்.

எனவே, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது அரசாங்கத்தின் தவறாகும்.
அத்துடன், ரணில் விக்ரமசிங்க பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் அமெரிக்காவுடன் ACSA உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டது.

மேலும், ராஜபக்சக்களும், விக்ரமசிங்கவும் நாட்டைக் காட்டிக் கொடுப்பது புதிதல்ல. இந்த உடன்படிக்கைகளுக்கு எதிராக வீதியில் இறங்கிய ஒரு அரசியல் அமைப்பு இன்று அவற்றிற்கு தலைசாய்க்கின்றது.

இந்த அரசாங்கம் சோசலிச ஆட்சி முறையை கடைப்பிடிப்பதாக உறுதியளித்து தற்போது தனியார்மயம் மற்றும் வரிவிதிப்பு என தமது வழிகளை மாற்றிக்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.