Mpox அல்லது குரங்கம்மை பாதிப்பை உலகளாவிய சுகாதார அவசரநிலை என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ள நிலையில், அந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க நான்கு வழிகளை அறிவுறுத்தியுள்ளனர்.
கொங்கோ மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளில் Mpox அல்லது குரங்கம்மை பரவல் மிக மோசமாக அதிகரித்துள்ளதை அடுத்து, உலக சுகாதார ஸ்தாபனம் உலகளாவிய சுகாதார அவசரநிலையை பிரகடனம் செய்தது.
அத்துடன் மேலும் பரவாமல் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்பதையும் வலியுறுத்தியது. இந்த நிலையில், ஆப்பிரிக்காவுக்கு வெளியே, முதல் முறையாக ஸ்வீடனில் ஒருவருக்கு Mpox பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியானது.
இதனையடுத்து ஐரோப்பா முழுவதும் உள்ள சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும், Mpox காற்றில் பரவும் வியாதி அல்ல என்பதால், கோவிட் போன்று அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்றும் நிபுணர்கள் தரப்பு நம்பிக்கை அளித்துள்ளது.
ஆனால் உடல் ரீதியான தொடர்பால், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமான நடவடிக்கைகளால், மூச்சை சுவாசிப்பதால் Mpox தொற்றிக்கொள்ளும் ஆபத்து உள்ளது என்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Mpox தொற்றானது பொதுவாக வெளிப்படையான தோல் புண்களை ஏற்படுத்துகிறது, இது நெருங்கிய தொடர்பை தவிர்க்க ஊக்கப்படுத்தலாம். இந்த நிலையில், Mpox பாதிப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை சுகாதார நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
Mpox பாதிப்பால் ஏற்பட்டுள்ள புண்களுடன் கூடிய நபர்களுடன் நெருக்கமான தொடர்பை தவிர்க்கலாம், தனிப்பட்ட பயன்பாட்டிற்கான பொருட்களை பகிர்ந்துகொள்ளாமல் இருக்கலாம், அத்துடன் உடல் சுத்தமாகவும் நல்ல சுகாதார நடைமுறைகளையும் பராமரிக்க வேண்டும்,
அடிக்கடி கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பாவுக்கு Mpox பரவும் அபாயம் அதிகமிருப்பதாகவே சுகாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
சீனாவில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட போது சில நூறு என கூறப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரே வாரத்தில் பல ஆயிரங்கள் என அதிகரித்தது. ஆனால் Mpox விடயத்தில் அப்படியான ஆபத்து இல்லை என்றே நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
2022ல் இருந்து Mpox பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உலகம் முழுக்க 100,000 பேர்கள் எனவும், இதில் 200 பேர்கள் மட்டுமே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
2022ல் மட்டும் 70 நாடுகளில் Mpox உறுதி செய்யப்பட்ட போதும், துரித நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.