மோடியின் கோரிக்கையை ஏற்று ட்விட்டரில் நடிகர் ரஜினி செய்த வேலை!

பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் கணக்கின் முகப்புப் பக்கத்தில் தேசியக் கொடி புகைப்படத்தை பறக்கவிட்டுள்ளார்.நாட்டின் 75வது சுதந்திர நாள் விழா வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடப்படும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன.

நாடு முழுவதும் அனைவரது வீடுகளிலும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தேசியக் கொடியை பறக்க விடும்படி பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதற்காக கடந்த சில நாள்களாக தபால் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவது தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, சுதந்திர நாள் கொண்டாட்டத்தையொட்டி சமூக ஊடகங்களில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அனைவரும் தேசியக் கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பிரதமர் மோடி தனது ட்விட்டர் கணக்கின் முகப்புப் பக்கத்தில் தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளார்.இந்நிலையில் பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் முகப்புப் பக்கத்தில் இருந்த புகைப்படத்தை மாற்றிவிட்டு தேசியக் கொடியை முகப்புப் பக்கத்தில் வைத்து பறக்கவிட்டுள்ளார். இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.