செவ்வந்தியை தேடி சென்ற பொலிஸாரிடம் சிக்கிய பெண்.

கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலையுடன் தொடர்புடையவராகவும், தற்போது தலைமறைவாக உள்ளவருமான இஷாரா செவ்வந்தி என்ற பெண், அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, அவரது தோற்றத்திற்கு மிகவும் ஒத்த பெண்ணொருவருடன் போதைப்பொருள் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்ஜீவ குமார சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்ஜீவ என்பவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி குறித்து துல்லியமான தகவல் வழங்குபவருக்கு 12 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.

கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி, புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் வைத்து குற்றவாளியான கணேமுல்ல சஞ்ஜீவ என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவருக்கு பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற 25 வயதுடைய பெண் உதவி மற்றும் ஆதரவு வழங்கியிருந்தமை விசாரணைகளில் வெளிவந்தது.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடந்த நாள் முதல் இதுவரை அவர் தலைமறைவாக உள்ள இடம் குறித்து துல்லியமான தகவல் இல்லாததால், சந்தேக நபரை கைது செய்வதற்கு துல்லியமான தகவல் வழங்குபவருக்கு 12 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில் தகவல்களை வழங்கக்கூடிய தொலைபேசி இலக்கங்களாக 

கொழும்பு குற்றப்பிரிவு பணிப்பாளரின் - 071-8591727  என்ற இலக்கமும் 
கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியின்  - 071-8591735 என்ற இலக்கமும் தகவல்களை வழங்குவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளன 
மேலும், தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மையை பாதுகாக்க இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படுகொலை தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவு தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.