ஓநாய் கண்ணீர் வடித்து தமிழர்களை ஏமாற்றும் இலங்கை அரசு - பேரணியில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய தாய்!

ஒப்படைக்கப்பட்ட எங்களது பிள்ளைகளை மீளக் கையளித்து, எமது கோரிக்கைகளை நிறைவேற்றினால் நாங்கள் எதற்கு இந்தப் போராட்டத்தை செய்யப்போகிறோம், வீடுகளில் இருந்திருப்போம்.

இவ்வாறு, இன்றைய வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் மக்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்களது 17000 பிள்ளைகளில் சொற்ப எண்ணிக்கையான பிள்ளைகளே விடுதலை செய்யப்பட்டிருந்தனர், அவ்வாறு விடுவிக்கப்பட்ட பிள்ளைகளும் நீண்டநாள் உயிருடன் வாழவில்லை, மிகுதி பிள்ளைகள் எங்கே எனத் தெரியாது, இவை யாவற்றிற்கும் இலங்கை அரசு பொறுப்புக்கூற வேண்டும் என அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் அத்துமீறல்கள், எமது தமிழ் சமூகத்தின் மீதான அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

எமது பெரும்பகுதி நிலங்களை அபகரித்துவிட்டு, சொற்ப காணிகளை விடுவித்து விட்டு ஓநாய் கண்ணீர் வடிப்பது போல் இலங்கை அரசு, தமிழ் மக்களை ஏமாற்றி கபட நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

உயிரோடு ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளை மீண்டும் எங்களிடம் கையளிக்க வேண்டும் அல்லது நாங்கள் ஒப்படைத்த எமது பிள்ளைகள் எங்கே என்றாவது கூற வேண்டும், இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்றைய பேரணியில் தெரிவித்துள்ளனர்.