பங்களாதேஷ் விமானப்படை விமானம் ஒன்று விபத்தில் சிக்கி 27 பேர்கள் கொல்லப்பட்ட நிலையில், சீனா தயாரித்துள்ள போர் விமானங்களே பங்களாதேஷில் அதிக விபத்துக்களை சந்தித்துள்ளதாக முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் விமானப்படையின் F-7 BGI போர் விமானமே டாக்காவின் உத்தரா பகுதியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 27 பேர்கள் கொல்லப்பட்டதுடன் 171 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 1991 முதல் பங்களாதேஷ் விமானப்படையின் 27 போர் விமானங்கள் மற்றும் பயிற்சி விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர் விமான விபத்துக்கள் தற்போது விமான பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, காலாவதியான விமானங்கள், இராணுவ நிறுவல்களைச் சுற்றியுள்ள நகர்ப்புற ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பது குறித்தும் கவலைகளை எழுப்பியுள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக பதிவான 11 விமானப்படை விபத்துகளில் 7 விமானங்கள் சீன தயாரிப்பு என்றே தெரிய வந்துள்ளது.
மூன்று விமானங்கள் ரஷ்ய தயாரிப்பு எனவும் மற்றுமொரு விமானம் செக் குடியரசு தயாரிப்பு என்றே இராணுவ வட்டாரத்தில் இருந்து தெரிய வருகிறது.
இந்த நிலையில், இந்த தொடர்ச்சியான விபத்துகளுக்கு சீன விமானங்கள் ஒரு முக்கிய காரணம் எனவும் ஆனால் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக விமானப்படை அவற்றை தொடர்ந்து பயன்படுத்துகிறது என்று முன்னாள் பங்களாதேஷ் விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று விபத்தில் சிக்கிய F-7 BGI போர் விமானமும் சீன தயாரிப்பாகும். இதுபோன்ற 40 போர் விமானங்கள் தற்போதும் பங்களாதேஷ் விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மட்டுமின்றி, முன்னர் விபத்தில் சிக்கியுள்ள FT-7> PT-6, மற்றும் F-7MB ஆகிய விமானங்களும் சீன தயாரிப்பாகும். இதனிடையே, பங்களாதேஷின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ் இந்த துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்து, முழுமையான விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளார்.