70 வீத பணவீக்கத்தை 2 வீதமாக கொண்டு வந்த ஜனாதிபதி ரணிலை விமர்சிப்பது நியாயமானதா? என கேள்வி

2022 ஆம் ஆண்டு முதன்மை பணவீக்கம் 70 சதவீதமாக காணப்பட்ட போது சவால்களை ஏற்காமல் தப்பிச் சென்றவர்கள் தற்போது பணவீக்கம் 2 சதவீதமாக குறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதியும் , அரசாங்கமும்  என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகிறார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில்  இன்று இடம்பெற்ற  அமர்வில்  அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம்,பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் என்பனவற்றை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,

 பொருளாதார தாக்கத்தினால் 26 சதவீதமாக உயர்வடைந்துள்ள ஏழ்மையை  2027 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 15  சதவீதமாகவும்,2035 ஆம் ஆண்டு  10 சதவீதமாகவும் குறைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதற்காகவே வினைத்திறனான முறையில்  அஸ்வெசும நலன்புரி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு மாத்திரம் நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது.

16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை செயற்படுத்தவில்லை.

இம்முறை வங்குரோத்துக்கு பின்னர் 17 ஆவது தடவையாக ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டுள்ளோம்.ஆகவே ஏற்றுக் கொண்ட செயற்திட்டங்களை  கட்டாயம் செயற்படுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்போம் எனவும் ஆகவே அதிகாரத்தை எம்மிடம் தாருங்கள் என்றும் மக்களிடம் ஆணை கோரும் மக்கள் விடுதலை முன்னணியினர் நாணய சுத்திகரிப்பு ஊடாக பொருளாதாரத்தை கட்டியழுப்புவதாக குறிப்பிடுகிறார்கள்.

உலகில் எந்த நாடும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி அனுரசணை வழங்குவதையும்,நாணய சுத்திகரிப்பில் ஈடுபடுவதையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

நிதி நடவடிக்கை பணிக்குழு 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையை அவதானத்துக்குரிய நாடு என்று அடையாளப்படுத்தியது.

நிதி சுத்திகரிப்பு ஊடாக பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யலாம் என்று மக்கள் விடுதலை முன்னணி கருதுமாயின்  நாடு சர்வதேச மட்டத்தில் அவதானத்துக்குரியதாக்கப்படும்.
அத்துடன் சமூக கட்டமைப்பில் குற்றச் செயல்கள் தீவிரமடையும்.எச்சந்தர்ப்பத்திலும் இலங்கை உட்பட எந்த நாடும் நாணய சுத்திகரிப்பில் ஈடுபடுவதற்கும்,பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கும் நிதி நடவடிக்கை பணிக்குழு இடமளிக்காது என தெரிவித்தார்.