தையிட்டி சட்ட விரோத விகாரையை இடித்தே தீரவேண்டும் என்பதே எமது போராட்டத்தின் நிலைப்பாடு!


தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் மக்களுக்குள் இருந்து போராட்டத்தை முன்னெடுக்கும் போது தமிழ்த்தேசிய கட்சிகளாக தம்மைக் காட்டிக்கொள்ளும் கட்சிகள் இந்த போராட்டத்தை சிதைக்கும் வகையில் செயற்பட்டுள்ளது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த நடராஜர் காண்டீபன், தமிழரசு கட்சியினர் மீது நேரடியாகவே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அது மட்டுமன்றி தையிட்டிப் பகுதி, முன்னர் யாருடைய கோட்டையாக இருந்தது என்றும் எனக்குத் தெரியும், அந்தக் கோட்டையில் இருந்தவர்கள் தங்களுடைய பகுதிகளை விடுவித்து தங்களுக்கான வீடுகளை கட்டி முடிக்கும் வரை நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார்கள். போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இப்போது அவர்களுடைய வீடுகள் அரண்மனை போன்று கட்டப்பட்டதும் போராட்டம் தேவையில்லையென ஒதுங்கி விட்டனர் எனவும் பகிரங்கமாக தமிழரசு கட்சியினர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இவ்வாறான பல பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே நாங்கள் இன்று மக்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். ஆனாலும் அதற்குள்ளும் நுழைந்து இந்த போராட்டத்தை சிதைக்கும் வகையில் குறித்த கட்சி செயற்படுகின்றது.

இவற்றையெல்லாம் தாண்டி எம்மீதும் போராட்டக்காரர்கள் மீதும் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தாலும் நாம் ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் எமக்குரிய உரிமை கிடைக்கும் வரை போராடியே தீருவோம்.

ஏனென்றால் போராடாமல் இருந்தாலும் சாவு தான், போராடினாலும் சாவு தான், ஆகவே போராடிச் சாவோம் என எமது தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கற்பித்த அந்த வழியில் அவரின் கொள்கையை பின்பற்றி நாம் பயணிப்போம்.

ஆகவே தையிட்டியில் கட்டியுள்ள சட்ட விரோத விகாரையை அகற்றக் கோரி போராடுவதில் என்ன தவறு இருக்கின்றது. சட்ட விரோதம் என்றால் அதனை அகற்றியே தீர வேண்டும். ஏனென்றால் தம்புள்ளையில் எமது இந்து ஆலயமான பிள்ளையார் ஆலயம் இடிக்கப்பட்டது.

ஆகவே சட்ட விரோதமான இந்த விகாரையையும் இடியுங்கள். தமிழரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டக்களத்திற்கு வந்த போது இது தொடர்பில் தாம் வழக்குப் பதிவு செய்திருக்கின்றோம் எனவும் இது தொடர்பில் எமது கவனத்தில் இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டிருந்தார்.

அதேவேளை இராணுவ அடக்கு முறைகள் காவல்துறை கைதுகள் என பல நெருக்கடியை கடந்து நாம் மக்கள் மத்தியில் செல்கின்றோம். இதையே தான் எமது கட்சியின் செயலாளர் கஜேந்திரன், கைது செய்யப்படுவதாக இருந்தால் அது நானாக இருக்க வேண்டும் எனக் கூறினார் எனவும் தெரிவித்திருந்தார்.

தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரையை அகற்றுமாறு கோரி, தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பொதுமக்கள் எனப் பலர் கூடி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் போராட்டம் முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டத்தின் இரண்டாவது நாள் தமிழரசு கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அங்கஜன் இராமநாதனும் நேரடியா போராட்டக்களத்திற்கு சென்று தமது ஆதரவையும் தெரிவித்திருந்தனர்.